Advertisment

விவசாயிகள் தண்ணீர் எடுக்க தடையா?- பா.ஜ.க. கண்டனம்!

Prohibition on farmers taking water? - BJP Condemnation!

Advertisment

பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று (25/07/2021) வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்தியில், "தேனி மாவட்டத்தின் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியிலும் முல்லைப் பெரியாறு ஆற்றுப் பகுதியிலும் உழவுத் தொழில் செய்யும் விவசாயிகள், தங்கள் பகுதியில் போர் அல்லது கிணறு அமைத்து, மின்சார பம்ப்செட் மூலம் தண்ணீரை எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த சூழலில், அனுமதி இல்லாமல் ஆற்றுநீர் திருடப்படுவதாகக் கூறி முல்லைப் பெரியாறு அணை பகுதி விவசாயிகளின் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட இந்தப் பகுதி விவசாயிகள் மிகவும் விரக்தி அடைந்துள்ளனர்.

கடந்த ஜூலை 8- ஆம் தேதி, மதுரையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தேனி மாவட்ட விவசாயிகள் அனுமதி இல்லாமல் தண்ணீரைப் பயன்படுத்தி அரசுக்கு இழப்பை ஏற்படுத்துவதாகவும் குற்றம்சாட்டினார்.

விளைச்சல் இல்லாமல் மன உளைச்சலில் சிரமப்படும் விவசாயிகளை எல்லாம் ஒட்டு மொத்தமாக திருடர்கள் என்று கூறுவது கண்டிக்கத்தக்கது.உணவு உற்பத்திச் செய்யும் விவசாயிகளுக்கு நிதியமைச்சர், 'திருடர்கள்' பட்டம் கொடுத்துள்ளார். விவசாயிகள் நீரை எடுத்து சென்று உணவு உற்பத்திக்கு மட்டுமே பயன்படுத்துகின்றனர். குளிர்பானம் தயாரிப்பு அல்லது குடிநீர் புட்டிகள் தயாரிப்பு தொழிலுக்கு பயன்படுத்தவில்லை.

Advertisment

விவசாயிகள் தங்கள் வயலில் இருக்கும் கிணறு, போர்வெல்லிருந்து தண்ணீரை குழாய் மூலம் தொலைவில் உள்ள தங்களுடைய தோட்டத்திற்கு எடுத்து செல்ல முடியாது என நிதியமைச்சர் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவு ஆற்றில், வாய்க்கால் இருந்து முறைகேடாக எடுத்தவர் மட்டும் பொருந்துமா அல்லது இதுவரை தண்ணீர் பைப் லைன் மூலம் விவசாயிகளின் தோட்டத்திற்கு வந்து கொண்டு இருந்தாலும் கூட இனிமேல் அப்படி எடுத்துச் செல்ல முடியுமா என்பது அதிகாரிகளுக்கே விளங்கவில்லை. ஆகவே, தமிழக நிதியமைச்சரின் தடாலடி உத்தரவினால் வயல், ஆற்றுக்கு, வாய்க்கால் அருகில் இருந்து பைப் லைன் மூலம் தண்ணீர் எடுத்துச் செல்லும் அனைத்து விவசாயிகளும் இதனால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேரடியாக விவசாயிகளையும், விவசாய உற்பத்திப் பொருள்களையும் பாதிக்கும் நிதியமைச்சரின் நடவடிக்கையை முதலமைச்சர் தடுத்து நிறுத்தி, ஏழை விவசாயிகளின், அடிப்படை வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நீர் ஆதாரம் வேண்டும் என்று தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஆகவே முதலமைச்சர் இந்தப் பிரச்சனையில் உடனடியாகத் தலையிட்டு பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நல்லதொரு தீர்வை வழங்க வேண்டும் என்று பா.ஜ.க. சார்பில் கேட்டுக் கொள்கிறேன்." இவ்வாறு பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Annamalai minister Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe