
திருச்சி முழுவதும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தொடர் சோதனை மேற்கொண்டுவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கடந்த 9ஆம் தேதி ஸ்ரீரங்கம் காவல் நிலையம் அருகே உள்ள டீக்கடைகளில் சோதனை செய்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது.
இருப்பினும் ஏற்கனவே சோதனை செய்யப்பட்ட அதே கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் உணவு பாதுகாப்புத் துறையினர் நேற்று (24/09/2021) சோதனை மேற்கொண்டனர்.
இச்சோதனையில், அபராதம் விதிக்கப்பட்டும் 3வது முறையாக விதிகளை மீறி அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த டீக்கடைக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு அறிவுறுத்தலின்படி, உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தலைமையில் சீல் வைக்கப்பட்டது.
இதேபோல், துறையூரில் உள்ள ஒரு கடையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மேற்கொண்ட சோதனையில் 115 கிலோ குட்கா கண்டறியப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.