Prohibited chemical mixture; Seizure of 5 tons of Sago

Advertisment

ஆத்தூரில், தடை செய்யப்பட்ட ரசாயனங்களைக் கலந்து தயாரிக்கப்பட்ட 5 டன் ஜவ்வரிசியை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சேலம் மாவட்டத்தில் 400க்கும் மேற்பட்ட சேகோ ஆலைகள் இயங்கி வருகின்றன. குறிப்பாக ஆத்தூர், தலைவாசல், பெத்தநாயக்கன்பாளையம், கெங்கவல்லி, நரசிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகள் மரவள்ளிக் கிழங்கில் இருந்து ஜவ்வரிசி, ஸ்டார்ச் உற்பத்தி செய்யும் கேந்திரமாக உள்ளன.

இந்நிலையில் ஜவ்வரிசியை 'பளபள'வென்று வெண்மை நிறமூட்டுவதற்காக அதில் ரசாயனம் கலந்து தயாரிக்கப்படுவதாகப் புகார்கள் கிளம்பின. இதையடுத்து, சேலம் மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர், மல்லூர், ஆத்தூர், தலைவாசல் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் சேகோ ஆலைகளில் சோதனை நடத்தினர்.

Advertisment

ஆத்தூரில் உள்ள ஒரு ஜவ்வரிசி ஆலையில் நடந்த ஆய்வில், ஜவ்வரிசியில் தடை செய்யப்பட்ட சல்பியூரிக் அமிலம், சோடியம் ஹைபோகுளோரைடு, பாஸ்பாரிக் அமிலம் உள்ளிட்ட ரசாயனம் பயன்படுத்தப்பட்டு இருப்பது தெரியவந்தது.

குறிப்பிட்ட ஒரு ஆலையில் இருந்து சல்பியூரிக் அமிலம், சோடியம் ஹைபோகுளோரைடு ஆகியவை 40 கேன், 5 டன் கலப்பட ஜவ்வரிசி ஆகியவற்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஆலைகளில் இருந்து உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உணவுப் பகுப்பாய்வுகூட பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், ''சேகோ எனப்படும் மரவள்ளிக் கிழங்கில் இருந்து ஜவ்வரிசி, ஸ்டார்ச் உள்ளிட்ட மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கப்படும் ஆலைகளில் மனித நுகர்வுக்கு பயன்படுத்தத் தடை செய்யப்பட்ட ரசாயனங்களைப் பயன்படுத்தி ஜவ்வரிசி தயாரிக்கப்படுவதாகப் புகார்கள் தொடர்ந்து வந்தன.

Advertisment

அதன்பேரில் ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார ஆலைகளில் சோதனை மேற்கொண்டோம். 5 டன் கலப்பட ஜவ்வரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விதிகளை மீறி இயங்கிய 2 ஆலைகளுக்கு எச்சரிக்கை செய்து நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சோதனைகள் சேகோ ஆலைகளில் அடிக்கடி நடத்தப்படும்'' என்றனர்.