Skip to main content

''நான் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு எந்த டென்ஷனும் இல்லாமல் பங்கேற்ற நிகழ்ச்சி இதுதான்'' - முதல்வர் பேச்சு

Published on 15/12/2022 | Edited on 15/12/2022
dmk

 

சென்னை மியூசிக் அகாடமி சார்பில் நடைபெறும் 96வது மார்கழி இசைத் திருவிழாவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தமிழக முதல்வர், ''தமிழர்களின் இசை வடிவம் பழமையானது., செழுமையானது. தொல்காப்பிய காலத்திற்கும் முன்பிருந்தே தமிழ் இசை வடிவம் இருந்து வருகிறது. பொதுவாக முதலமைச்சரிடம்தான் கோரிக்கை வைப்பார்கள். ஆனால் நான் இங்கு இசைக் கலைஞர்களுக்கு வைக்கும் கோரிக்கை என்பது காலத்தின் தேவை என்று கருதுகிறேன்.

 

இன்றைய நாளிதழ் ஒன்றில் மியூசிக் அகாடமியின் தலைவர் முரளி பேட்டியளித்துள்ளார். நான் அதை காலையில் படித்தேன். அதில் தனது கொள்கையை வெளிப்படையாகச் சொல்லி இருக்கிறார். எங்களின் விழாக்களின் மூலமாக வேற்றுமையில் ஒற்றுமை காண்கிறோம் என்று முரளி சொல்லியிருக்கிறார். இந்தக் கருத்துதான் இப்போது நாட்டுக்குத் தேவையான கொள்கை.

 

இந்தக் கொள்கை அரசியல் கட்சிகளுக்கு மட்டுமல்ல, இதனை அரசியல் கட்சிகள் வலியுறுத்துவதாக மட்டும் நீங்கள் சுருக்கி விடக்கூடாது. இதுபோன்ற கலை அமைப்புகளின் கொள்கையாக, ஒவ்வொரு தனி மனிதனின் கொள்கையாக மாற வேண்டும்; எதிரொலிக்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன். அதேபோல் மியூசிக் அகாடமி போன்ற இசையமைப்புகள் தமிழிசைக்கு, தமிழ்ப் பாடல்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். தமிழ் இலக்கியத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் பாடல்கள் இருக்கின்றன. அந்தப் பாடல்களும் இதுபோன்ற இசை மன்றங்களில் தவறாமல் ஒலிக்க வேண்டும். பக்தி இசையாக இருந்தாலும், திரை இசையாக இருந்தாலும், மெல்லிசையாக இருந்தாலும், பாப் இசையாக இருந்தாலும், ராக் இசையாக இருந்தாலும் தமிழிசையாக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய அன்பான வேண்டுகோள்.

 

மொழி இருந்தால்தான் கலை இருக்கும். இசை வளர்ப்பது கலை வளர்த்தல் மட்டுமல்ல தமிழ் வளர்ப்பதும்தான் என்பதை மனதில் வைத்து அனைத்துக் கலைஞர்களும், அனைத்து கலை அமைப்புகளும் செயல்பட வேண்டும் என இந்த நிகழ்ச்சியில் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நான் ஆட்சிப் பொறுப்பேற்று எந்தவித பிரச்சனையும் இல்லாமல், பரபரப்பும் இல்லாமல் ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும் என்றால் எந்த டென்ஷனும் இல்லாமல் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறேன் என்று சொன்னால் அது இந்த நிகழ்ச்சிதான்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பேரறிஞர் அண்ணா - கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மரியாதை! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Chief Minister honors Anna - kalaignar Memorial

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. இதனையொட்டி நேற்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்தனர்.

இதன் ஒரு பகுதியாக தென் சென்னையில் திமுக சார்பில் போட்டியிடும் தமிழச்சி தங்கப்பாண்டியன் மற்றும் மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் ஆகியோரை ஆதரித்து பெசன்ட் நகரில் நேற்று (17.04.2024) மாலை 4 மணியளவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அதனைத் தொடர்ந்து மக்களவை தேர்தல் பரப்புரை ஓய்ந்ததால் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

Next Story

“பாஜகவையும், அதிமுகவையும் ஒரு சேர வீழ்த்த வேண்டும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின் சூளுரை!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
BJP and ADMK must be defeated together says CM MK Stalin speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், “வணக்கம். நல்லாயிருக்கீங்களா? ஏப்ரல் 19ஆம் தேதி நம் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகும் நாள். நாட்டோட எதிர்காலம் உங்கள் கையில்தான் இருக்கிறது. உங்கள் வாக்கு உங்கள் தொகுதி எம்.பி.யை மட்டும் தேர்வு செய்வதற்கான வாக்கு இல்லை. கடந்த 10 ஆண்டுகளாக நம் நாட்டை நாசப்படுத்திய பாசிச ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வாக்கு. இனி இந்தியாவில் ஜனநாயகம் இருக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்யும் தேர்தல் இது. அரசியல் சட்டத்தை காப்பாற்ற நடக்கிற தேர்தல். மதம், ஜாதி கடந்து மக்கள் ஒற்றுமையாக வாழ உங்கள் வாக்குதான் வலிமையான ஆயுதம். இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றது முதல் என்னென்ன திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு வருகிறேன் என்பது உங்களுக்கே தெரியும்.

மாதாமாதம் மகளிருக்கு ரூ. 1000 வழங்கக் கூடிய கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம், பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் செய்ய விடியல் பயணம் திட்டம், பள்ளி குழந்தைகள் காலையில் பசியில்லாமல் படிக்க முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், கல்லூரி மாணவிகளுக்கு ரூ. 1000 வழங்கக் கூடிய புதுமைப் பெண் திட்டம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத் தர நான் முதல்வன் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி என ஏராளமான திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.

தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் உற்ற துணையாக இருக்கிறோம். உங்கள் திராவிட மாடல் அரசின் சாதனைகள் இந்தியா முழுவதும் எதிரொலிக்க, இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு உங்கள் வாக்குகளை செலுத்துங்கள். தமிழகத்தை வஞ்சித்த பாஜகவையும் தமிழ்நாட்டை பாழ்படுத்திய அதிமுகவையும் ஒரு சேர வீழ்த்த வேண்டும். தமிழ்நாட்டிற்கு சிறப்பு திட்டங்கள் கிடைக்க தமிழையும் தமிழரையும் உண்மையாக நேசிக்கிற ஒன்றிய ஆட்சி டெல்லியில் அமைய திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.