
பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு தோழமைக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வில் விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், ''அரசியல் களத்தில் அவரைப்போல முதிர்ச்சியும், பக்குவமும் கொண்ட ஒரு தலைவரை நாம் பார்க்க முடியாது. வயதால் மூப்படைவது என்பது மட்டும் முதிர்ச்சி அல்ல. பண்பால் முதிர்ச்சி அடைவதுதான் சிறப்புக்குரியது. அவர் பக்குவம் நிறைந்தவர், நிதானம் நிறைந்தவர், பதற்றப்படாதவர் என்பதை நாடறியும். அவர் மேடையில் சொன்னார் 'என்னை விட ஒரு வயது. ஒன்றரை வயது இளையவர் கலைஞர்.
அவரை தலைவரை நான் ஏற்றுக் கொண்டிருக்கிறேன். அவரைவிட வயதில் மூத்தவனாக இருக்கக்கூடிய நான் அவரை தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் கலைஞரை விட்டால் தமிழினத்தை காப்பாற்றுவதற்கு நாதியில்லை என்பதால் தான். கலைஞரைப் போல உழைக்க யாராலும் முடியாது. அவருடைய உழைப்பும், அவருடைய அர்ப்பணிப்பும் இந்த மொழிக்கும், இனத்திற்கும் ஒரு வரலாற்று தேவையாக இருக்கிறது. எனவே தான் அண்ணாவை தலைவராக ஏற்றுக் கொண்ட நான் என்னைவிட ஒரு வயது இளையவராக இருக்கக்கூடிய கலைஞரை தலைவராக ஏற்றுக்கொண்டு செயல்படுகிறேன். கட்சி மாறப் போகிறேன் என்றெல்லாம் வதந்திகள் பரப்புகிறார்கள். எந்த காலத்திலும் இந்த அன்பழகனிடம் ஒருபோதும் எடுபடாது. அது நடக்காது' என்று உறுதிப்பட பேசினார்.
அவருடைய பேச்சு தெள்ளத்தெளிவாக இருந்தது. 'நான் முதலில் மனிதன்;இரண்டாவதாக அன்பழகன்; மூன்றாவதாக சுயமரியாதைக்காரன்; நான்காவதாக அண்ணாவின் தம்பி;ஐந்தாவதாக கலைஞரின் தோழன்;இதுதான் நான்' என்று தன்னை பற்றி விளக்கிருக்கிறார். நான் மனிதன் என்று சொல்வதிலிருந்து அவர் எந்த அளவுக்கு பெரியாரியத்தை உள்வாங்கி இருக்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். எல்லோரும் தங்களது சாதி அடையாளத்தையும், மத அடையாளத்தையும் முன்னிறுத்துகிற இந்த சமூக அமைப்பில் 'நான் மனிதன்' என்று சொல்லக்கூடிய ஒரு சுயமரியாதைக்காரராக அவர் வளர்ந்திருக்கிறார்.
ஒருமுறை நானும் எனது கட்சி பொதுச்செயலாளர் ரவிக்குமாரும் பேராசிரியர் இல்லத்திற்குச் சென்று பிறந்தநாள் வாழ்த்து சொன்ன போது, நீண்ட நேரம் பேசிக் கொண்டிருக்கிறோம். நான் நெகிழ்ந்து போனேன். அரசியல் உலகில் இப்படி ஒரு நட்பு, தலைமையின் மீது மதிப்பு இதுவரை நாம் கேள்விப்பட்டதும் இல்லை, பார்த்ததும் இல்லை என்று சொல்லத் தக்க வகையில் கலைஞர்-பேராசிரியர் நட்பு இருந்திருக்கிறது என்பதுதான் வரலாறு. அன்றைக்கு அவர் கலைஞரைப் பற்றி அவ்வளவு பேசினார். ஓடி உழைக்க முடியாத சூழ்நிலையிலும் இனம், மொழி என்ற கவலையோடு அவற்றை காப்பாற்றுவதற்கு தகுதி படைத்தவர் கலைஞர்தான் என்று எங்களிடம் பேசினார்'' என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)