Professional Magic Casting Competition; brothers arrested

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ராஜாஜி குளக்கரை தெருவை சேர்ந்த பட்டுத்தறி நெசவுத் தொழிலாளி சீனிவாசன் (40 ) என்பவரை காய்ச்சலுக்கு மந்திரம் போடும் தொழிலில் ஏற்பட்ட போட்டி காரணமாக சுத்தியால் தலையில் அடித்ததில் பலத்த காயமடைந்து சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

Advertisment

வாலாஜாபேட்டை ராஜாஜி குளக்கரை தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (40 ). பட்டுத் தறி நெசவு தொழிலாளியாக உள்ளார். மேலும் காய்ச்சலுக்கு மந்திரம் போடும் தொழிலையும் செய்து வந்தார். இவரது மனைவி குமாரி( 35 ). இந்த தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

Advertisment

இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த மணி என்பவரின் மகன்களான பிரகாஷ்(35), கிருஷ்ணா(30) ஆகியோருக்கும், சீனிவாசனுக்கும் இடையே மந்திரம் போடும் தொழில் காரணமாக போட்டி இருந்து வந்துள்ளது. அதேவேளையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஊரில் திருவிழா நடந்த போது, சீனிவாசன் சாமியாடி அருள்வாக்கு சொல்லி உள்ளார். இது தொடர்பாக சீனிவாசனுக்கும், பிரகாஷ், கிருஷ்ணா ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் ஏற்பட்டது. இது ஒரு புறம் இருக்க, பிரகாஷ் குடும்பத்தில் நெசவுத்தொழில் நலிவடைந்ததாகவும் கூறப்படுகிறது . இதற்கு முக்கிய காரணம் சீனிவாசன் தான் என்று கோபத்தில் இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த மாதம் 30ம் தேதி திடீரென சீனிவாசனிடம் பிரகாஷ், கிருஷ்ணா ஆகியோர் வந்து உனக்கு உடல்நலம் சரியில்லாமல் உள்ளது. மந்திரம் போடுகிறோம் வா என்று சொல்லி சீனிவாசனை பிரகாஷ் தன்னுடைய வீட்டுக்குள் அழைத்து சென்றுள்ளார். பின்னர் அண்ணன் தம்பி இருவரும் சேர்ந்து சீனிவாசனை ஆபாசமாக பேசி உன்னால் தான் எங்கள் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது என்று பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆத்திரத்தில் கிருஷ்ணா தான் வைத்திருந்த சுத்தியால் தலையில் ஓங்கி அடித்துள்ளார். பிரகாஷ் சீனிவாசன் கழுத்தை பிடித்து இழுத்து கீழே தள்ளி எட்டி உதைத்துள்ளார். இதில் ரத்த காயங்களுடன் வெளியே வந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சீனிவாசன் இன்று இறந்தார். இதுகுறித்து சீனிவாசனின் மனைவி குமாரி வாலாஜாபேட்டை காவல்துறையில் புகார் கொடுத்தார். அதன் பேரில் காவல்துறையினர் ஏற்கனவே கிருஷ்ணா, அவரது தம்பி பிரகாஷ் ஆகியோரை அடிதடி வழக்கில் கைது செய்துள்ள நிலையில், சீனிவாசன் இறந்த நிலையில் கொலை வழக்காக மாற்றியுள்ளனர்.

Advertisment

இந்தநிலையில் பிரகாஷ் வீட்டை நேற்றிரவு மர்ம நபர்கள் அடித்து உடைத்ததோடு தீ வைத்துள்ளனர். அந்த நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்ட நிலையில், வீட்டில் இருந்த பொருட்கள் மேற்கூரை ஆகியவற்றை மர்ம நபர்கள் சூறையாடியுள்ளதால் அங்கு பதட்டமான சூழல் நிலவியது. தொழில் போட்டி காரணமாக பட்டுத்தறி நெசவு தொழிலாளியை சுத்தியால் அடித்து கொலை செய்த அண்ணன் தம்பி கொலை செய்த சம்பவம் வாலாஜாபேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.