Thanga. Shanmuga Sundaram

''குடகு மலையில் தோன்றி கர்நாடகத்திலிருந்து736 கி.மீ தூரம் பயணித்து தமிழகத்திற்கு வரும் காவிரி நீர் 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக விவசாயிகளைக் காப்பாற்றி விவசாயம் செழிக்க உதவியது. 1956 கணக்கீட்டின் படி தமிழகத்தில் 22.77 இலட்சம் ஏக்கரும் கர்நாடகாவில் 4.93 இலட்சம் ஏக்கரும் விவசாயம் செய்யப்பட்டு வந்தது.

Advertisment

Advertisment

2020 ல் 18 இலட்சம் ஏக்கர் கூடுதலாகி கர்நாடகா 22 இலட்சம் ஏக்கரில் சாகுபடி உயர்ந்துள்ளது. ஆனால் தமிழகத்திலோ கர்நாடகா தண்ணீர் தர முரண்டு பிடித்துவருவதால் 5.77 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் குறைந்து 17 இலட்சம் ஏக்கராக குறைந்து போய் உள்ளது என்பது பலரும் அறியாத செய்தியாக உள்ளது வேதனைக்குரியது.

விவசாயத் தொழில் பல்வேறு இன்னல்களைத் தாண்டி நடைபெற்று வருகிறது. விவசாயிகள் கட்டுப்படியான விலை இல்லாமலும் ஆட்கள் கிடைக்காமலும் விவசாயத் தொழில் செய்வதை இளைஞர்கள் பலரும் ஏளனமாக நினைப்பதாலும் விவசாயப் பரப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் இலவச மின்சாரம் ரத்து என்பது உணவுப் பொருள் உற்பத்தியைக் கேள்விக்குறியாக்கி விடும். விவசாயிகள் ஏரிக்குளங்களைக் கால்வாய்களைத் தூர்வார போதுமான நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

மாறாக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மின் இணைப்பு வேண்டி 4.25 இலட்சம் விவசாயிகள் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு தீர்வு காண நடவடிக்கை இல்லை. அதற்குப்பதிலாக விவசாயிகளை ஒடுக்குவதற்கு இலவச மின்சார ரத்து செய்யும் திட்டத்தை முன்னெடுப்பது வேதனைக்குரிய செய்தி ஆகும். கரோனா ஊரடங்கைப் பயன்படுத்தி விவசாயிகளை வஞ்சிக்கும் முன்னெடுப்பை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். மத்திய அரசின் நடவடிக்கைகளைத் திரும்பப் பெறாவிட்டால் நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் செய்யத் தயாராக உள்ளனர்'' என அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.