Skip to main content

சர்க்கரை கலந்து வெல்லம் தயாரிக்க கரும்பு விவசாயிகள் எதிர்ப்பு!!! சேலத்தில் இருதரப்புக்கும் காரசார வாக்குவாதம்!

Published on 17/12/2018 | Edited on 17/12/2018
pongal


 

சேலம் மாவட்டத்தில் ஓமலூர், காடையாம்பட்டி, தின்னப்பட்டி, தீவட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான வெல்லம் உற்பத்தியாளர்கள் உள்ளனர். பொங்கல் பண்டிகையையொட்டி உருண்டை வெல்லம் உற்பத்தி மும்முரமாக நடந்து வருகிறது. இந்தப் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் வெல்லத்தை, உற்பத்தியாளர்கள் சேலம் செவ்வாய்பேட்டை மூலப்பிள்ளையார் கோயில் அருகே வெல்ல மண்டியில் நடைபெறும் ஏலத்திற்குக் கொண்டு வருவது வழக்கம். 
 

இந்நிலையில் இன்று (டிசம்பர் 17) காலை வெல்லம் உற்பத்தியாளர்கள் மற்றும் கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மகாசபைக் கூட்டம் நடந்தது. அப்போது பேசிய கரும்பு விவசாயிகள் சிலர், கடந்த சில நாள்களுக்கு முன்பு உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் சர்க்கரை கலந்து தயாரிக்கப்பட்ட பல டன் கலப்பட வெல்லத்தை பறிமுதல் செய்தனர். வெல்லம் உற்பத்தியாளர்களின் இதுபோன்ற செயலால் கரும்பு விவசாயிகளுக்கு போதிய விலை கிடைப்பதில்லை,'' என்றனர்.
 

பலர் முன்னிலையில் கரும்பு விவசாயிகள் பொத்தாம் பொதுவாக இவ்வாறு அதிருப்தியை வெளிப்படுத்தியதால், வெல்லம் உற்பத்தியாளர்கள் அவர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் இருதரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நிலைமை மோசமடைவது குறித்து சிலர் அளித்த தகவலின்பேரில் அன்னதானப்பட்டி போலீசார் நிகழ்விடத்தில் குவிக்கப்பட்டனர். 
 

இதுகுறித்து கரும்பு விவசாயிகள் கூறுகையில், ''சேலம் மாவட்டம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட வெல்லம் உற்பத்தி ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளில் 100 டன்னுக்கு மேல் வெல்லம் உற்பத்தி செய்யப்படுகின்றன. 
 

கடந்த மூன்று ஆண்டுகளாக மட்ட ரகமான சர்க்கரையை கலந்து வெல்லம் உற்பத்தி செய்து வருகின்றனர். இதனால் 2500 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு டன் கரும்பு, இப்போது 1500 ரூபாய்க்குதான் விற்பனை ஆகிறது. இதனால் டன்னுக்கு ஆயிரம் ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது. கரும்பு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். ஆகவே, சர்க்கரை கலந்து வெல்லம் உற்பத்தி செய்வதை முற்றிலும் நிறுத்த வேண்டும்,'' என்றனர்.
 

வெல்லம் உற்பத்தியாளர்கள் சங்கத்தலைவர் ரமேஷ்குமார் கூறுகையில், ''சர்க்கரை கலக்காமல் வெல்லம் உற்பத்தி செய்வது தொடர்பாக உற்பத்தியாளர்களை அழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இதனை கொஞ்சம் கொஞ்சமாக முறைப்படுத்தி, வரும் காலங்களில் சர்க்கரை கலக்காமல் வெல்லம் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
 

இது ஒருபுறம் இருக்க, வெல்லம் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகி ஒருவர் தனது பேஸ்புக் பக்கம் மற்றும் வாட்ஸ்அப் தளங்களில், 'எதற்கு கரும்பு விவசாயம் செய்கிறீர்கள்? சாகுங்கள்,' என பதிவிட்டு இருந்தார். இதற்கு கரும்பு விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

பழனி முருகன் கோவிலுக்கு நாட்டுச் சர்க்கரை கொள்முதல்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Procurement of native sugar for Palani Murugan temple

பழனி, தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பிரசாதங்கள் தயாரிக்க ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இருந்து கரும்புச் சர்க்கரை எனப்படும் நாட்டுச் சர்க்கரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி, நேற்று நடைபெற்ற ஏலத்தில் பங்கேற்க சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 1,610 மூட்டைகள் நாட்டுச் சர்க்கரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.அதில், 60 கிலோ எடையிலான ஒரு மூட்டை, முதல் தரம், குறைந்தபட்ச விலையாக ரூ. 2,570க்கும், அதிகபட்சமாக ரூ. 2,600க்கும் விற்பனையானது. சராசரி விலையாக ரூ. 2,580க்கு விற்பனையானது.

இரண்டாம் தரம், குறைந்தபட்ச விலையாக ஒரு மூட்டை ரூ. 2,510க்கும், அதிகபட்சமாக ரூ. 2,520க்கும், சராசரி விலையாக ரூ. 2,520க்கும் விற்பனையானது.இதில், மொத்தம் 85 ஆயிரத்து 20 கிலோ எடையிலான 1,417 நாட்டுச் சர்க்கரை மூட்டைகள் விற்பனையாகின.இதன் விற்பனை மதிப்பு ரூ. 36 லட்சத்து 16 ஆயிரத்து 300 ஆகும் என விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.