கல்வித்துறைக்கு மத்திய அரசு தர வேண்டிய நிதியை கொடுக்கவில்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அண்மையில் தெரிவித்திருந்தார். எதிர்க்கட்சிகளும் மத்திய அரசு உடனடியாக கல்விக்கான நிதியை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். புதிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் கல்விக்கான நிதி வழங்கப்படும் என்ற நிபந்தனையை மத்திய அரசு விதிப்பதாகவும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து, 'கொள்கையை விட்டுக் கொடுத்து மத்திய அரசிடம் நிதியை பெற தேவையில்லை' எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் எஸ்.எஸ்.ஏ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியை மத்திய அரசு நிறுத்தியுள்ளதால் சுமார் 15,000 ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தமிழக தலைமைச் செயலாளருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் 15 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் ஐந்தாயிரம் பேர் என மொத்தம் 20 ஆயிரம் பேருக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. செப்டம்பர், அக்டோபர் ஆகிய இரண்டு மாதங்களுக்கு மட்டுமே சம்பளம் வழங்கப்படக் கூடிய நிலை இருக்கிறது எனவும் நவம்பர் மாதம் முதல் சம்பளம் வழங்க முடியாத நிலை இருப்பதாக அத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இப்படிப்பட்ட சூழலில் அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமைச் செயலாளருடன் சந்தித்து இது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் மற்றும் சிறப்பு நிதி ஒதுக்குவது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.