
பொங்கல் பண்டிகைக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 பொருட்கள் மற்றும் முழு கரும்பு கொண்ட பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "பொங்கல் விழாவினை மக்கள் சிறப்பாக கொண்டாடும் நோக்கோடு கடந்த அ.தி.மு.க. அரசின் ஆட்சியில் பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் அடங்கிய தொகுப்போடு பொங்கல் பரிசு பணமும்,முழு கரும்பும் வழங்கி வந்தோம். ஆனால் தி.மு.க. அரசு முதலில் அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பில் பணம், கரும்பை காணவில்லை.
தற்போது அறிவித்திருக்கும் பொங்கல் தொகுப்பில் கரும்பு சேர்க்கப்பட்டு, தொகுப்போடு வழங்கப்பட்டு வந்த பொங்கல் பரிசு பணத்தை காணவில்லை. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்போடு பரிசு பணமும் வழங்கப்பட வேண்டும் என இந்த விடியா தி.மு.க. அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.