Skip to main content

தீவிர அரசியலில் பிரியங்கா காந்தி! மோடி மீண்டும் வாரணாசியில் போட்டியிடுவாரா? திருமாவளவன் 

Published on 24/01/2019 | Edited on 24/01/2019
modi



காங்கிரஸ் பேரியக்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர்களில் ஒருவராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டிருப்பதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்று அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
 

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும், 
 

பிரியங்கா காந்தி அன்னை இந்திரா காந்தியைப் போலவே ஈர்ப்பு மிக்க ஆளுமையாகத் திகழ்பவர். கடந்த 2009 ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது அவரது எளிமையும், எவரும் எளிதாக அணுகிப் பேசக்கூடிய தன்மையும் மக்களை வெகுவாகக் கவர்ந்தன. தற்போது அவருக்கு காங்கிரஸ் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது அக்கட்சியின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் உறுதுணையாக இருக்கும். 
 

உத்தரபிரதேச மாநிலத்தின் கிழக்குப் பகுதிக்கு அவர் பொறுப்பாளராக  நியமிக்கப்பட்டிருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் செல்வாக்குள்ள தொகுதிகளான அமேதி, ரேபரேலி ஆகியவை மட்டுமின்றி ஜவஹர்லால் நேரு போட்டியிட்டு வென்ற பூல்பூர் தொகுதியும் கிழக்கு உத்தரப்பிரதேசத்தில்தான் உள்ளது. பிரதமர் மோடி கடந்தமுறை வெற்றிபெற்ற வாரணாசி தொகுதியும் அதே பகுதியில்தான் இருக்கிறது. தேர்தல்  நெருங்கும் இச்சூழலில், பிரியங்கா காந்தி உத்தரபிரதேச கிழக்குப் பகுதியின் மேற்பார்வையாளராக பொறுப்பேற்றுத் தீவிர அரசியலில் ஈடுபட்டிருப்பதால் நரேந்திர மோடி அவர்கள் வாரணாசியில் மீண்டும் போட்டியிடுவாரா அல்லது தொகுதி மாறுவாரா என்ற சந்தேகம் இப்போது எழுந்துள்ளது. 
 

உத்தரப்பிரதேசத்தில்  யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி ஏற்பட்டதிலிருந்து அங்கே சனாதன சக்திகளின் கொட்டம் தலைவிரித்தாடுகிறது. போலி என்கவுண்டர்களில் அப்பாவிகள் சுட்டுக் கொல்லப்படுவது இந்தியாவிலேயே உத்தரப்பிரதேசத்தில்தான் அதிகம். ஆதித்யநாத் ஆட்சியில் இதுவரை 32 பேர் அப்படி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அதுபோலவே லாக்-அப் படுகொலைகளும் அதிகரித்துள்ளன. ஏப்ரல் 2017 முதல் பிப்ரவரி 2018 வரையிலான  11 மாதங்களில் மட்டும் 144 பேர் போலிஸ் லாக்- அப்பில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 
 

ஆதித்யநாத்தின் சனாதன பயங்கரவாத ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர பிரியங்கா காந்தியின் அரசியல் நுழைவு  துவக்கமாக அமையும். பாஜகவின் வெறுப்புப் பிரச்சாரத்தை முறியடிக்கும் நன்மருந்தாக பிரியங்கா காந்தி அவர்களின் அணுகுமுறை இருக்கும்.
 

சனாதனத்துக்கும் சனநாயகத்துக்கும் இடையிலான யுத்தமாக உருவெடுத்திருக்கும் 2019 பொதுத்தேர்தலில் சனநாயகத்தின் வெற்றியை நிலைநாட்டுவதற்கு பிரியங்கா காந்தி அவர்களின் அரசியல் பங்களிப்பு வழிவகுக்கும் என உறுதியாக நம்புகிறோம். அவருக்கு எமது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார். 
 


 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

“உலகளவில் பேசப்படும் திரைப்படமாக அமையும்” - திருமாவளவன் பாராட்டு 

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
thirumavalavan praised vetrimaaran gopi nainar manushi movie trailer

வெற்றிமாறன் தற்போது விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே கிராஸ் ரூட் ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தையும் நடத்தி வரும் வெற்றிமாறன், உதயம் என்.எச்.4, பொறியாளன், கொடி, லென்ஸ், அண்ணனுக்கு ஜே உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தயாரித்துள்ளார். கடைசியாக ஆண்ட்ரியா ஜெர்மியா நடிப்பில் 2022ஆம் ஆண்டு வெளியான 'அனல் மேலே பனித்துளி' படத்தைத் தயாரித்திருந்தார். 

இப்போது சூரி ஹீரோவக நடிக்கும் கருடன் படத்தைத் தயாரித்து வருகிறார். இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து போஸ்ட் புரொடெக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே அறம் பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஆன்ரியா நடிப்பில் மனுசி என்ற தலைப்பில் ஒரு படத்தைத் தயாரித்து வருகிறார். இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கும் நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஆன்ரியாவின் பிறந்தநாளில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. சூர்யா இதனை வெளியிட்டிருந்தார். 

இதையடுத்து இப்படத்தை பற்றி எந்த அப்டேட்டும் வராத நிலையில் நேற்று இப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை 6 மணிக்கு விஜய் சேதுபதி வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது ட்ரைலரை விஜய் சேதுபதி தனது எக்ஸ் தள பக்கத்தின் வாயிலாக வெளியிட்டுள்ளார். ட்ரைலரை பார்க்கையில், அப்பா பாலாஜி சக்திவேலும், மகள் ஆன்ரியாவும் ஒரு வழக்கு சம்மந்தமாக போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்கிறது. அங்கு வைத்து இருவருக்கும் காவல் துறையினருக்கும் நடக்கும் விசாரணையை வைத்து இந்த ட்ரைலர் உருவாகியுள்ளது. மேலும் எந்த வழக்கிற்காக அவர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுகின்றனர், இறுதியில் என்ன நடந்தது என்பதை அழுத்தமான காட்சிகளுடன் அரசியல் வசனங்களுடன் இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது. 

ட்ரைலரில் “போலிஸ் உன்ன தேடி வருதுனா, அது அவுங்களோட பிரச்சனை இல்லை இந்த நாட்டோட பிரச்சனை, சாதி ஜனநாயகமா, சாதிய உருவாக்குனவங்க தான் இந்தியாவை உருவாக்குனாங்க” போன்ற வசனங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதனிடையே வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன், இப்படத்தின் ட்ரைலரை பார்த்து படக்குழுவை பாரட்டியுள்ளார். அவர் பேசுகையில், “வசனங்கள் மிக ஆழமானதாக இருக்கிறது. இதுவும் உலகளவில் பேசப்படும் திரைப்படமாக அமையும். தயாரிப்பாளரும் இயக்குநரும் முற்போக்கு பார்வையுள்ளவர்களாக இருப்பது, இந்தத் திரைப்படத்தின் வெற்றியாக பார்க்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.