Skip to main content

தனியார் பள்ளியா? அரசுப் பள்ளியா? -அதிர வைக்கும் மாணவர் சேர்க்கை புள்ளி விபரம்!

Published on 19/09/2020 | Edited on 19/09/2020

 

SCHOOL

 

ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் சேர்க்கை என்பது அரசுப் பள்ளி மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளை விட தனியார் பள்ளிகளில் தான் அதிகம் நடைபெறுவது வழக்கம். பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்க்கவே விரும்புவர். அதற்காக எவ்வளவு செலவானாலும் கடன் வாங்கியாவது தனியார் பள்ளிகளில் சேர்த்து வந்தனர். குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினர் கூலி வேலை செய்பவர்கள் கூட அவர்களது பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கும் மோகம் இருந்தது. ஆனால் இந்த வருடம் கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது.

இந்த வைரஸ் தாக்கம் காரணமாக, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பலருக்கும் வேலை வாய்ப்பு பறிபோனது. நடுத்தர வர்க்கத்தினர், தினக் கூலி வேலை செய்பவர்கள் தான் இந்த ஊரடங்கு என்கிற பொது முடக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். நிலையான வருமானம் இன்றி குடும்பத்தை நடத்தவே மிகவும் கஷ்டம் ஏற்பட்டுள்ளது. தற்போது பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் வேலை வாய்ப்பும் முழுமையான வருமானமும் இல்லை. இதனால் 80 சதவீத மக்களுக்கு நிரந்தர வருவாய் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

முன்புபோல் அவர்களால் மாத அல்லது வார சம்பளம் வாங்க முடியவில்லை. இதனால் நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் அடித்தட்டு மக்கள் அன்றாடக் குடும்பச் செலவுகளுக்கே பெரிதும் சிரமப்படுகின்றனர். கிடைப்பதை வைத்தும், கடன் வாங்கியும் சிக்கனமாகக் குடும்பம் நடத்த வேண்டிய பரிதாப நிலையில் இருக்கின்றனர். இப்படிப்பட்ட கொடுமையான காலகட்டத்தில் பிள்ளைகளை, எப்படித் தனியார் பள்ளிகளில் படிக்கவைக்க முடியும்? ஆகவே தங்கள் பிள்ளைகளை இவ்வருடம் அதிக அளவில் அரசுப் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர்.

இப்போது ஒன்றாம் வகுப்பு, ஆறாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்புகளுக்கு அரசுப் பள்ளி, அரசு நிதி உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. சென்ற 17.08.2020 -ஆம் முதல் மாணவர் சேர்க்கை தொடர்ந்து நடைபெறுகிறது. இதைப்போன்றே எல்.கே.ஜி, யு.கே.ஜி, 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் பள்ளியில் சேர்ந்து வருகின்றனர். இந்த வருடம் தங்களது பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் பெற்றோர்கள் அதிகமாகச் சேர்த்து வருகிறார்கள். தனியார் பள்ளிகளில் சேர்க்கை எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது.

 

Ad

 

உதாரணத்திற்கு, ஈரோடு மாவட்ட புள்ளி விபரப்படி, ஒன்றாம் வகுப்பில் கடந்த 17.08.2020 முதல் 10.09.2020 வரை மொத்தம் 9,162 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதில் அரசுப் பள்ளியில் மட்டும் 7,724 மாணவர்களும், அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் 1,048 மாணவர்களும் சேர்ந்துள்ளனர். ஆனால், தனியார் பள்ளிகளில் வெறும் 390 மாணவர்கள் மட்டுமே இந்த காலகட்டத்தில் சேர்ந்துள்ளனர்.

இதேபோல் ஆறாம் வகுப்பில், மொத்தம் 10,310 மாணவர்கள் சேர்ந்துள்ளார்கள். இதில் அரசுப் பள்ளியில் 7,338 மாணவர்களும், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 2,360 மாணவர்களும் சேர்ந்துள்ளனர். ஆனால், அதேநேரத்தில் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில், அதிகபட்சமாக 612 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். இதேபோல் ஒன்பதாம் வகுப்பில் இதே காலகட்டத்தில் மொத்தம் 4,460 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதில் அரசுப் பள்ளிகளில் 3,641 மாணவர்களும், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 600 மாணவர்களும் சேர்ந்துள்ளனர். ஆனால், தனியார் பள்ளியில் மொத்தமே 219 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். இதைப் போலவே, எல்.கே.ஜி, யு.கே.ஜி மற்ற வகுப்புகளிலும் தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் அதிக அளவில் சேர்ந்துள்ளனர்.

 

இதுகுறித்து அரசுப் பள்ளி தலைமையாசிரியர் ஒருவர் கூறும்போது, "இந்த கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மத்திய மாநில அரசுகளால் போடப்பட்ட ஊரடங்கு பொது முடக்கத்தால் தொழிலும், மக்களின் உழைப்பும் முடக்கப்பட்டதால் வருமானத்திற்கு வழி இல்லாமல் போய்விட்டது. இதனால் ஒவ்வொரு குழந்தையின் பெற்றோர்களின் வாழ்வியல் நிலையே சீர்குலைந்து விட்டது.  முன்புபோல் பணப்புழக்கம் இல்லை. எனவே முன்புபோல் செலவும் செய்யவும் முடியாது. இதன் காரணமாகத் தான் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்துவருகிறார்கள்.

 

Nakkheeran

 

அது மட்டுமில்லாமல் இந்த வருடம் பெரும்பாலும் பள்ளிகள் நடைபெற வாய்ப்பிருக்குமா எனத் தெரியவில்லை. தனியார் பள்ளியில் தொடர்ந்து அதே கட்டணம்தான். ஏற்கனவே வறுமையும், எந்தவித வருமானமும் இல்லாமல் இருக்கும் மக்கள் என்ன செய்வார்கள்? இந்த வருடம் ஏராளமான பெற்றோர்கள் தனியார் பள்ளிகளில் படித்த தங்கள் குழந்தைகளின் டி.சி.க்களை பெற்று அரசுப் பள்ளிகளில் சேர்த்து வருகிறார்கள். இந்தக் கரோனா வைரஸ் பொருளாதார நிலை மட்டுமல்லாமல் மக்கள் உணர்வுகள் மற்றும் மனநிலையையும் மாற்றியுள்ளது" என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசுப் பள்ளி மாணவர்களுக்காக வேன்! நண்பனின் ஆசையை நிறைவேற்றிய இளைஞர் மன்றம்!

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
 youth council bought a van for government school students who fulfilled their friend's wish

கீரமங்கலம் மேற்கு திருவள்ளுவர் இளைஞர் மன்றம் ஆண்டுக்கு ஒரு முறை விளையாட்டு விழா மட்டும் நடத்திவிட்டு ஓய்ந்துவிடாமல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று முனைப்புடன் அப்பகுதி பள்ளிகளுக்கு ஏராளமான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்ததுடன் சில ஆசிரியர்களை நியமித்து சம்பளமும் வழங்கி வருகின்றனர்.

இந்த இளைஞர் மன்றத்தில் உள்ள சிற்றரசு என்ற இளைஞர் அரசுப் பள்ளிக்கு கூடுதல் வசதியாக தன் சொந்தச் செலவில் வேன் வாங்கி மாணவர்களை ஏற்றிச் செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டு வேனும் வாங்கினார். வேன் வாங்கி கொஞ்ச நாட்களிலேயே துரதிஷ்டவசமாக சிற்றரசு ஒரு விபத்தில் உயிரிழந்தார். அந்த வேன் சில வருடங்களாக அவரது வீட்டிலேயே நின்றது.

 youth council bought a van for government school students who fulfilled their friend's wish

இந்த நிலையில்தான் நண்பன் சிற்றரசின் அரசுப் பள்ளி ஆசையை நிறைவேற்ற நினைத்த இளைஞர் மன்ற நண்பர்கள் சிற்றரசின் குடும்பத்தினர் அனுமதியுடன் அந்த வேனை எடுத்து வந்து பழுது நீக்கி சிற்றரசு நினைவு பள்ளி வாகனம் என்று இயக்கத் தொடங்கியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் மேற்கு திருவள்ளுவர் மன்றம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படிக்கும் 67 மாணவர்களையும் அவர்களின் வீடுகளில் காலையில் ஏற்றி மாலையில் கொண்டு போய்விட ஆலோசித்தனர். பலர் பெட்ரோல் செலவுகளை ஏற்றுக் கொண்டனர். இளைஞர் மன்றத்தில் உள்ள ஓட்டுநர்கள் வேன் ஓட்டத் தயாரானார்கள்.

வெள்ளிக்கிழமை மாலை அரசுப் பள்ளிக்கான வேன் இயக்கும் தொடக்க விழா பள்ளி தலைமை ஆசிரியர் துரைப்பாண்டியன் தலைமையில் இளைஞர் மன்றத்தினர், பெற்றோர் ஆசிரியர் கழகம், எஸ்எம்சி நிர்வாகிகள், பேரூராட்சி கவுன்சிலர்கள் முன்னிலையில் பேரூராட்சித் தலைவர் சிவக்குமார் வேன் வசதியை தொடங்கி வைத்தார். மாணவர்களுடன் வேன் செல்லும் போது பெற்றோர்களும் மாணவர்களும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் ஏறிச் சென்றனர். 

 youth council bought a van for government school students who fulfilled their friend's wish

இது குறித்து இளைஞர்கள் கூறும் போது, “அரசுப் பள்ளியை வளமாக்க வேண்டும், அதனால் தனியார் பள்ளியைவிட தரம் உயர்த்த வேண்டும் என்று பள்ளியின் தேவையறிந்து செய்து வருகிறோம். அந்த வகையில் சிற்றறரசு வாங்கிய வேனை அவரது நினைவாக பள்ளிக்கு இயக்குகிறோம். இளைஞர் மன்றத்தினரே ஓட்டுநர்களாக உள்ளனர். இளைஞர் மன்றம் மூலமே பெட்ரோல் செலவுகளும் செய்து கொள்கிறோம். தொடர்ச்சியாக இந்த வேன் இயக்கப்படும் போது கூடுதல் மாணவர்கள் சேர்க்கை இருக்கும் என்று நம்புகிறோம்” என்றனர்.

Next Story

“மாணவர்கள் காலணி அணியாவிட்டால் சுயமரியாதையை இழக்க நேரிடும்” - சட்டமன்ற மதிப்பீட்டுக் குழு தலைவர்

Published on 29/01/2024 | Edited on 29/01/2024
Students lose self-esteem if they don't wear shoes says mla anbazhagan

வேலூரில், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் க. அன்பழகன் தலைமையிலான சட்டமன்ற மதிப்பீட்டுக் குழு, வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் அரசின் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக இன்று ஆய்வு மேற்கொண்டது.

தொரப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் மதிப்பீட்டுக் குழு ஆய்வில், பள்ளியில் சுகாதாரமில்லாமல் இருப்பதும் பள்ளி மாணவர்கள் காலணிகளை வெளியே விட்டுவிட்டு வகுப்பறைக்குள் அமர்ந்து இருப்பதைக் கண்ட குழு தலைவர் அன்பழகன், ஏன் காலணி இல்லாமல் அமர்ந்து இருக்கிறீர்கள் என மாணவர்களிடம் கேள்வி எழுப்பினார். 

அதற்கு மாணவர்கள், சுத்தமாக இருக்க வேண்டும் எனப் பதிலளித்தனர். “அப்படியானால் ஆசிரியரும் காலணி இல்லாமல் தானே இருக்க வேண்டும்” எனக் கேள்வி எழுப்பிய அன்பழகன், மாணவர்கள் காலணி அணிய வேண்டும். இல்லையெனில் நோய்த் தொற்றுகள் ஏற்படும். இதனால் மாணவர்களுக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்படும், அதுமட்டுமின்றி சுயமரியாதையை மாணவர்கள் இழக்க நேரிடுவார்கள். மாணவர்கள் சுய மரியாதையுடன் இருக்க வேண்டும். ஆகவே காலணி அணிந்து வகுப்பறையில் அமர வேண்டும்”  என வகுப்பு ஆசிரியருக்கு அறிவுரை வழங்கிவிட்டு, மாணவர்களை அவர் கண் முன்னே காலணி அணிந்து வரச் சொல்லி கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.