Private hospital nurse violated in Chatur! - Dr. Raghuveer Arrested!

சாத்தூரில் உள்ள கிருஷ்ணா மருத்துவமனையில் குழந்தைகள் நலப்பிரிவில் சிறப்பு மருத்துவராகப் பணிபுரியும் ரகுவீர் (வயது 39) மீது சாத்தூர் டவுண் காவல்நிலையம் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்துகிறது.

Advertisment

சாத்தூர் – ஒத்தையால் கிராமத்தைச் சேர்ந்த சௌமியா (23 பெயர் மாற்றப்பட்டுள்ளது), சாத்தூர் – கிருஷ்ணா மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வருகிறார். இவர், அந்த மருத்துவமனையில் பணிபுரிந்துவரும் டாக்டர் ரகுவீர் மற்றும் மருத்துவமனை நிர்வாகி டாக்டர் கிருஷ்ணவேணி ஆகியோர் மீது புகார் அளித்துள்ளார்.

Advertisment

ஆந்திரப்பிரதேசம் – கர்னூல் மாவட்டம் – கணேஷ் நகரைச் சேர்ந்த டாக்டர் ரகுவீர், சாத்தூர் பெரியார் நகரில் வசித்தபடியே, கிருஷ்ணா மருத்துவமனையில் குழந்தைகள் நலப்பிரிவு சிறப்பு மருத்துவராகப் பணி புரிகிறார். 2019-ல் இருந்து இதே மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் பிரிவில் வேலை செய்துவருகிறார், பட்டியலினத்தவரான சௌமியா.6-ஆம் தேதி பகல் 12-30 மணிக்கு பச்சிளம் குழந்தைகள் பிரிவுக்கு வந்த டாக்டர் ரகுவீர் சௌமியாவிடம் “கேமரா வேலை செய்கிறதா?” என்று கேட்க, சௌமியாவும் “ஆமாம்.. கேமரா வேலை செய்கிறது..” எனப் பதிலளித்திருக்கிறார்.

Private hospital nurse violated in Chatur! - Dr. Raghuveer Arrested!

இதனைத் தொடர்ந்து ரகுவீர் “நீ இங்கே வா..” என்று கூப்பிட்டிருக்கிறார். அதற்கு சௌமியா “என்ன சார்?” என்று கேட்டிருக்கிறார். “நான் கூப்பிட்டா வரமாட்டியா?” என்று கூறி சௌமியாவின் கையைப் பிடித்து இழுத்திருக்கிறார் ரகுவீர். அதன்பிறகு, ரகுவீரிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள பெரும் போராட்டமே நடத்தியிருக்கிறார் சௌமியா. ரகுவீரோ சௌமியாவின் தலைமுடியைப் பிடித்து இழுத்து, மேல் பகுதியில் கையால் குத்தி, கன்னத்தில் மாறி மாறி அறைந்து, சுவற்றில் முகத்தை மோதச்செய்து, கடுமையாக வன்முறையைப் பிரயோகித்தபோது “நான் கிருஷ்ணவேணி மேடத்திடம் சொல்வேன்..” என்று சௌமியா கதறியிருக்கிறார். அதற்கு ரகுவீர் “உன்னையெல்லாம் என்ன செய்தாலும் கேட்கிறதுக்கு யாருமில்லை. நீ எங்கு வேண்டுமானாலும் சொல்லு. என்னை ஒண்ணும் பண்ணமுடியாது.” என்று தொடர்ந்து தாக்கியதோடு, கழுத்தைப்பிடித்து நெரித்திருக்கிறார்.

Advertisment

ரகுவீர் மீது எதிர்த்தாக்குதல் நடத்தி அந்த அறையிலிருந்து தப்பிய சௌமியா, மருத்துவமனை நிர்வாகி டாக்டர் கிருஷ்ணவேணியிடம் சென்று தன்னிடம் ரகுவீர் அத்துமீறியது குறித்து முறையிட, “ஓபி முடிந்த பிறகுதான் உன்னைப் பார்க்கமுடியும்..” என்று அலட்சியப்படுத்தியதோடு “போய் வேலையைப் பார்.. உயிரா போகப் போகுது..” என்று தெனாவட்டாகப் பேச, “ஆமாம் மேடம், பத்து நிமிஷத்துல உயிர் போயிருக்கும்.” என்று அழ, கிருஷ்ணவேணியோ “இந்த ஆஸ்பத்திரில இப்படித்தான் நடக்கும். அட்ஜஸ்ட் பண்ணி வேலை பார்க்கிறதா இருந்தா பாரு. இல்லைன்னா வீட்ல இருந்துக்கோ..” என்று பொறுப்பற்ற முறையில் பேசியிருக்கிறார்.

அதன்பிறகுதான், தன்னுடைய தாயாரைத் தொடர்புகொண்டு நடந்ததைச் சொல்லி அழுதிருக்கிறார் சௌமியா. அதனைக் கேட்டு அவரின் தாய் பதறியடித்துக்கொண்டு கிருஷ்ணா மருத்துவமனைக்கு வந்து ரகுவீரிடம் “என்ன டாக்டர் இப்படி பண்ணிருக்கீங்க?” என்று கேட்டதற்கு “இங்க வந்து தேவையில்லாம பேசாத. வெளில போம்மா..” என்று விரட்டியிருக்கிறார்.

நடந்த கொடுஞ்செயலை மருத்துவமனை நிர்வாகமும் கண்டுகொள்ளாத நிலையில், சாத்தூர் அரசு மருத்துவமனைக்குச் சென்று, ரகுவீர் அடித்ததால் கன்னத்திலும் தலையிலும் ஏற்பட்ட வலிக்கு சிகிச்சை எடுத்தபடி, சாத்தூர் டவுண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் சௌமியா.

டாக்டர் ரகுவீர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கிருஷ்ணா மருத்துவமனை நிர்வாகி டாக்டர் கிருஷ்ணவேணி மீதும் வழக்கு பதிவாகி, விசாரணை நடைபெற்று வருகிறது.