
ஊழல் வழக்கில், லஞ்ச ஒழிப்புத்துறையால் முடக்கப்பட்ட ரூபாய் 48 லட்சத்தை விடுவிக்கக்கோரி, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு, இன்று (20/03/2021) விசாரணைக்கு வந்த போது, லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'நீதிமன்றத்தில் சாட்சி விசாரணை முடிவடையவில்லை, எனவே தொகையை விடுவிக்கக் கூடாது' என வாதிட்டார்.
அதைத் தொடர்ந்து நீதிபதி, 'அரசின் அனைத்துச் சேவைகளையும் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே பெற முடியும் என்ற நிலை உள்ளது. லஞ்சம் கொடுத்தால்தான் குடும்ப அட்டை, சாதிச் சான்று, வருமானச் சான்று பெற முடியும் எனும் நிலை உள்ளது. ஊழல் வழக்குகளை பல ஆண்டாக நிலுவையில் வைத்திருப்பதால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தப்பிக்க வாய்ப்புள்ளது. வழக்கு நிலுவையால் ஊழல் தடுப்புச் சட்டம் உருவாக்கப்பட்டதன் நோக்கத்தைச் சிதைக்கிறது' எனக் கருத்துத் தெரிவித்தார். மேலும், அந்தத் தனியார் நிறுவனத்தின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.