Advertisment

“தனியார் நிறுவன பால் கொள்முதல் விலை சுரண்டலை தடுக்க வேண்டும்!” - ராமதாஸ் 

publive-image

கரோனா பெருந்தொற்றைக் காரணம் காட்டி தமிழகத்தில் தனியார் பால் நிறுவனங்கள் உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யும் பாலின் விலை குறைத்து நிர்ணயத்திருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதற்கு கண்டனம் தெரிவித்து வெளியிட்டிருக்கும் அந்த அறிக்கையில், “கரோனா வைரஸ் தொற்று பரவலால் அனைத்துத் தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த நெருக்கடியான சூழலைப் பயன்படுத்திக்கொண்டு பால் கொள்முதல் விலையைத் தனியார் பால் நிறுவனங்கள் கணிசமாக குறைந்துள்ளன. பால் உற்பத்தியாளர்களின் பலவீனத்தைப் பயன்படுத்திக்கொண்டு தனியார் நிறுவனங்கள் பால் விலையைக் குறைத்திருப்பது பெரும் சுரண்டலாகும்.

Advertisment

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த 17ஆம் தேதி முதல் ஊரடங்கும், 24ஆம் தேதி முதல் தளர்வுகளற்ற ஊரடங்கும் நடைமுறையில் உள்ளன. அதன் காரணமாக காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விற்பனை கணிசமாக குறைந்துவிட்டது. ஆனால்,மருந்து கடைகளும்பால் விற்பனை நிலையங்களும் திறக்க அனுமதிக்கப்பட்டிருப்பதால் பால் விற்பனை குறையவில்லை. ஆனால், பால் விற்பனை குறைந்துவிட்டதாகக் கூறி விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பாலுக்கான விலையைத் தனியார் நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் குறைத்திருக்கின்றன.

Advertisment

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தனியார் நிறுவனங்கள் ஒரு லிட்டர் தண்ணீர் கலக்காத பசும்பாலை ரூ.18 என்ற விலைக்குத்தான் கொள்முதல் செய்கின்றன. ஆவின் நிறுவனம் ஒரு லிட்டர் பசும்பாலை ரூ. 32 என்ற விலைக்கும், ஒரு லிட்டர் எருமைப்பாலை ரூ. 41 என்ற விலைக்கும் கொள்முதல் செய்கிறது. ஆனால், தனியார் நிறுவனங்கள் எந்தப் பாலாக இருந்தாலும் 18 ரூபாய்க்கு மேல் தருவது கிடையாது. இது வழக்கமான கொள்முதல் விலையுடன் ஒப்பிடும்போது 40 விழுக்காடு குறைவாகும்.

தனியார் பால் நிறுவனங்களுக்கென அதிகாரப்பூர்வமாக கொள்முதல் விலை எதுவும் கிடையாது. ஆவின் நிறுவனம் எந்த விலைக்கு பாலைக் கொள்முதல் செய்கிறதோ, அதே விலைக்கு தனியார் நிறுவனங்களும் கொள்முதல் செய்துவந்தன. சில நேரங்களில் தேவை அதிகமாக இருந்தால் ஆவின் நிறுவனத்தைவிட கூடுதல் விலை கொடுத்தும் பாலைக் கொள்முதல் செய்வது வழக்கம். ஆனால், இப்போது ஊரடங்கைக் காரணம் காட்டி பால் விலையைக் குறைப்பதைவிட பெரிய மோசடி இருக்க முடியாது.

தமிழ்நாட்டில் பாலுக்கான தேவை எந்தவகையிலும் குறையவில்லை. பொதுத்துறை நிறுவனமான ஆவின் பால் கொள்முதல் விலையைக் குறைக்கவில்லை. இன்னும் கேட்டால் தமிழ்நாட்டில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு கடந்த 16ஆம் தேதி முதல் ஆவின் பால் விற்பனை விலை லிட்டருக்கு ரூ. 3 குறைக்கப்பட்டுள்ளது. மாறாக, தனியார் பால் விலைகள் கடந்த ஜனவரி மாதத்தில் லிட்டருக்கு ரூ. 4 உயர்த்தப்பட்டன. தமிழ்நாட்டில் ஆவின் பாலின் அதிகபட்ச விலை லிட்டர் ரூ. 48 மட்டும்தான். ஆனால், தனியார் நிறுவனங்கள் ஒரு லிட்டர் பாலை அதிகபட்சமாக ரூ. 64 வரை விற்பனை செய்கின்றன. ஆவின் நிறுவனத்தைவிட ஒரு லிட்டர் பாலை ரூ. 16 கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் தனியார் நிறுவனங்கள், கொள்முதல் விலையை மட்டும் லிட்டருக்கு ரூ. 14 குறைப்பது எந்தவகையில் நியாயம்? இந்த அநியாயத்தையும், அற மீறலையும் தமிழக அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கக்கூடாது.

கால்நடைகளுக்கான தீவனம் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகள் அண்மைக்காலங்களில் கடுமையாக உயர்ந்துவிட்டன. அதனால், ஒரு லிட்டர் பாலுக்கான உற்பத்திச் செலவு 30 ரூபாயை நெருங்கிவிட்டது. பால் உற்பத்திக்கான மாடுகளை வளர்க்க கிராமப்புறங்களில் பெண்கள் படும்பாடுகளைப்பட்டியலிட முடியாது. கடந்த இரு ஆண்டுகளாக ஆவின் பால் கொள்முதல் விலையும், தனியார் பால் கொள்முதல் விலையும் உயர்த்தப்படவில்லை. இதனால் பால் உற்பத்தியாளர்கள் ஏற்கனவே நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். இத்தகைய சூழலில் தனியார் நிறுவனங்கள் கொள்முதல் விலையைக் குறைத்து விவசாயிகளின் வயிற்றில் அடிக்கக்கூடாது. நிலைமையை உணர்ந்து அவர்களுக்கு நியாயமான விலை வழங்க வேண்டும்.

பொதுவாகவே பால் மிக மிக அத்தியாவசியமான உணவுப் பொருள் ஆகும். பால் விற்பனை விலையாகஇருந்தாலும், கொள்முதல் விலையாக இருந்தாலும் அதன் ஏற்ற இறக்கங்கள் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். தனியார் நிறுவனங்கள் பால் விற்பனை விலையை விருப்பம் போல உயர்த்துவதையும், கொள்முதல் விலையை இஷ்டம் போல் குறைப்பதையும் தடுக்க தமிழ்நாட்டில் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலை ஒழுங்குமுறை ஆணையத்தை அரசு அமைக்க வேண்டும். அதற்கும் முன்பாகதனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் பாலுக்கு நியாயமான விலை கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

pmk Ramadoss
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe