Private college chairman arrested!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இயங்கிவந்த தனியார் கல்லூரியின் சேர்மன் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்து அதுதொடர்பாக போராட்டம் நடைபெற்ற நிலையில் போலீசார் கல்லூரியின் சேர்மனை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisment

இது தொடர்பாக கல்லுரி மாணவிகள் கொடுத்த புகார் கடிதத்தில், 'கல்லூரி சேர்மன் ஜான் டேஸ்வின், மாணவிகளின் ஏழ்மையைப் பயன்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துவருகிறார். அந்த மாணவி எங்கள் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வருகிறார். கஷ்டப்படும் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதைத் தெரிந்துகொண்டு, அந்த மாணவியைத் தனியாக அழைத்து பாலியல் டார்ச்சர் செய்திருக்கிறார். ஒருகட்டத்தில், அந்த மாணவியை நிர்வாணமாக வீடியோ-காலில் பேச வைத்தார். மேலும், அந்த மாணவியிடம் சக மாணவிகள் குறித்து கேட்டறிந்து, அவர்களையும் அவ்வாறு நடந்துகொள்ளத் தூண்டியிருக்கிறார். இதனை நிரூபிப்பதற்கு எங்களிடம் ஆதாரங்கள் உள்ளன. எங்களைக் காப்பாற்றுங்கள். தவறு நடந்தபின் காப்பதைவிட, தவறே நடக்காமல் காப்பதுதான் நீதி. ஜான் டேஸ்வினுக்குக் கிடைக்கும் தண்டனை, மற்றவர்களுக்கும் ஒரு பாடமாக இருக்கவேண்டும். இக்கல்லூரியை மூடிவிட்டால், எங்களது படிப்பு கேள்விக்குறியாகிவிடும். உடன் படிக்கும் மாணவிக்கு இப்படி ஒரு பாலியல் கொடுமை நடந்த பிறகு, எங்களுக்கு மிகவும் பயமாக இருக்கிறது. நாங்கள் படிப்பை நிறுத்தாமல், மாற்றாக வேறொரு கல்லூரியில் படிக்க உதவுங்கள்’ என உருக்கமாகக் கூறியுள்ளனர்.

Advertisment

Private college chairman arrested!

கல்லூரி மாணவிகள் சார்பாக அருப்புக்கோட்டை டவுன்காவல்நிலைய ஆய்வாளருக்கும் புகார் தரப்பட்டுள்ளது. அதில் ‘கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவிகளைத் தனியாக அழைத்து, சேர்மன் ஜான் டேஸ்வின் தவறாகப் பேசுகிறார். மாணவிகளுக்கு வாட்ஸ்-ஆப் மூலம் ஆபாச போட்டோக்களை அனுப்பி, பாலியல் தொல்லை தருகிறார். இதற்கு உடந்தையாக இருந்த, அங்கு ஆசிரியர்களாகப் பணியாற்றும் கார்த்திக், இந்துமதி, அன்பு ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்தக் கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்துச் செய்யவேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளனர். இதுதொடர்பாக போராட்டமும் நடைபெற்ற நிலையில் தற்பொழுது கல்லூரி சேர்மன் ஜான் டேஸ்வினை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவரது செல்போனை கைப்பற்றி சைபர் க்ரைம் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.