
கரூரில் தனியார்ப் பள்ளி ஆசிரியை ஒருவர் செல்போன் கோபுரத்தை சுற்றிப் போடப்பட்டிருந்த வேலியில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் ஆசிரியரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த மகாதானபுரம் அருகே உள்ள தீர்த்தம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரஸ்வதி. இவர் அங்குள்ள தனியார்ப் பள்ளியில் துணை முதல்வராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை வீட்டு வாசலை சுத்தப்படுத்தியபோது வீட்டிற்கு அருகே உள்ள தனியார் செல்போன் டவரை சுற்றி அமைக்கப்பட்ட இரும்பு வேலியை எதேர்சையாக தொட்டுள்ளார். அதில் மின்சாரம் பாய்ந்து சரஸ்வதி தூக்கி வீசப்பட்டார்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சரஸ்வதியை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டது. இன்று மதியம் சம்பந்தப்பட்டவர்கள் உடலைப் பெற்றுக்கொள்ள மருத்துவமனை நிர்வாகம் அறிவித்த பொழுது உறவினர்கள் உடலை வாங்க மறுத்தனர்.
அலட்சியமாக செயல்பட்ட தனியார் செல்போன் டவர்அதிகாரிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இரண்டு இடங்களில் சாலை மறியல் ஈடுபட்டனர். காவல்துறையினர் உறவினர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை ஈடுபட்ட நிலையில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இந்தசம்பவத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் மற்றும் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.