காட்டுமன்னார்கோவில் அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதால் 30-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்துள்ள நெய்வாசல் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்துகள் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 30 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் 10 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். ராஜன் வாய்க்கால் கரையை ஓட்டி சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த இடம் குறுகிய பகுதியாகவும், வாகனங்கள் முந்தி செல்வதற்கான வாய்ப்புகள் இல்லாத சூழல் இருக்கிறது. இந்நிலையில் இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி அங்கு நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
காலை நேரங்களில் கல்லூரி, பள்ளி மற்றும் பணிக்கு செல்வோர் அதிகமாக பேருந்துகளில் பயணிக்கின்றனர். இதனால் தொழில் போட்டி காரணமாக தனியார் பேருந்துகள் அதிவேகமாக இயக்கப்படுவதும்விபத்துகளுக்கு காரணம் என அந்தப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.