/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/2020_2.jpg)
கரூர் அருகே அம்மாவுடன் பள்ளிக்கு செல்ல இருந்த 5ம் வகுப்பு பள்ளி மாணவன் தனியார் ஜவுளி நிறுவன பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
கரூர் அடுத்த ஆத்தூர் பிரிவு ஜே.கே.பி நகர் பகுதியை சேர்ந்தவர்கள் மணிகண்டன் (33)- ரம்யா (29) தம்பதியினர். இவர்களுக்கு இளவிழியன் (10) என்ற மகன் உள்ளார். மணிகண்டன் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இன்று காலை 9 மணி அளவில் ரம்யா மகனை பள்ளிக்கு அழைத்துச் செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து புறப்பட்டு உள்ளார்.
கரூர் - ஈரோடு நெடுஞ்சாலையில் கரூர் பாலிடெக்னிக் அருகில் சாலையைக் கடப்பதற்காக ரம்யா தந்து மகனுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக எதிர்பாராத விதமாக அதிவேகத்தில் வந்த தனியார் ஜவுளி நிறுவனத்திற்கு ஆட்களை ஏற்றிச் செல்லும் பேருந்து, இருசக்கர வாகனத்தை இடித்து விட்டது. அதன் பிறகு பேருந்து ஓட்டுநர், அதே இடத்திலேயே பேருந்தை விட்டு விட்டு அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார்.
பேருந்து இடித்ததில் படுகாயமடைந்த இளவிழியன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். மேலும் படுகாயம் அடைந்த ரம்யா கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் மூலமாக சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கரூர் காவல் நிலைய போலீசார் இளவிழியனின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சம்பவ இடத்தில் தடயங்களை கைப்பற்றிய போலீசார் தப்பி ஓடிய தனியார் ஜவுளி நிறுவன பேருந்து ஓட்டுநரை வலைவீசி தேடி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)