Skip to main content

நீதிமன்ற வளாகத்தில் கைதிகள் திடீர் போராட்டம்; சிறையில் சாராய ஊறல் விவகாரத்தால் பரபரப்பு!

Published on 04/08/2023 | Edited on 04/08/2023

 

Prisoners sat suddenly in salem court premises

 

சேலம் மத்திய சிறையில் கடந்த சில நாட்களுக்கு முன் திடீர் சோதனை நடத்தப்பட்டது. 7வது தொகுப்பில் உள்ள கைதிகள் அறைக்குப் பக்கத்தில் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட பிளாஸ்டிக் பாட்டிலை சிறைக்காவலர்கள் கைப்பற்றினர். அதில் 2 லிட்டர் தண்ணீர் மற்றும் சில பொருட்களைக் கொண்டு சாராய ஊறல் போடப்பட்டு இருந்தது தெரியவந்தது. 

 

சிறை வளாகத்திற்குள் சாராய ஊறல் போடப்பட்டு இருந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. ஆயுள் கைதியான வீராணம் அருகே உள்ள தைலானூரைச் சேர்ந்த மாங்கா பிரபு என்கிற பிரபு (39) என்பவர்தான் சாராய ஊறல் போட்டிருக்கலாம் என சிறைக்காவலர்கள் சந்தேகித்தனர்.  

 

இதையடுத்து சந்தேகத்தின் பேரில் அவரைத் தனி அறைக்கு மாற்றினர். இதற்கிடையே, கொலை வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, மாங்கா பிரபு மற்றும் அவருடைய கூட்டாளிகளும், கொலை வழக்கு கைதிகளுமான ஐயனார் (37), ஐயந்துரை (37) ஆகிய மூன்று பேரையும் மாநகர ஆயுதப்படை காவல்துறையினர் நீதிமன்றத்திற்கு ஆகஸ்ட் 2 ஆம் தேதி அழைத்துச் சென்றனர். அப்போது நீதிமன்ற நுழைவு வாயில் அருகே சென்றபோது கைதிகள் மூவரும் திடீரென்று தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

அவர்களைக் காவல்துறையினர், போராட்டத்தைக் கைவிடுமாறு சமாதானப்படுத்தினர். அப்போது மாங்கா பிரபு, சிறையில் சாராய ஊறல் போட்டதாக என் மீது சிறைக்காவலர்கள் பொய் புகார் கூறி, தனி அறையில் அடைத்துள்ளனர். இதனால் என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது எனக் கூறினார். 

 

காவல்துறையினர் அவரை சமாதானப் படுத்தியதை அடுத்து, போராட்டத்தை அவரும், கூட்டாளிகளும் கைவிட்டனர். இதையடுத்து மூவரையும் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்கள் நீதிமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தியதை அறிந்த நீதிபதி, மூவரையும் எச்சரித்தார். தங்கள் கோரிக்கைகள் எதுவாயினும், வழக்கறிஞர்கள் மூலம் மனுவாகக் கொடுக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார். 

 

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு அவர்கள் மூவரும் சேலம் மத்திய சிறைக்கு மீண்டும் கொண்டு செல்லப்பட்டனர். கைதிகள் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்