விசாரணைக் கைதி மரணம்..! மரணத்தில் சந்தேகம் என உறவினர்கள் குற்றச்சாட்டு..!    

Prisoner passes away in sivagangai

மூதாட்டி ஒருவரை அடித்து, மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவத்தில், காவல்துறையால் கைது செய்யப்பட்டு கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட விசாரணைக் கைதி ஒருவர், சந்தேகமான முறையில் மரணமடைந்துள்ளதால் கலக்கமடைந்துள்ளது சிறைத்துறை.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்டது பாப்பா ஊரணி பகுதி. கடந்த 9ஆம் தேதியன்று இரவு, அப்பகுதியிலுள்ள நாடக மேடை ஒன்றில் தூங்கிக்கொண்டிருந்த 65 வயது மூதாட்டி ஒருவரை மிரட்டி, அடித்து துன்புறுத்தி, பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட முயன்ற அதே பகுதியைச் சேர்ந்த சின்னையா என்பவரின் மகனான 52 வயதுடைய நீலகண்டனை காரைக்குடி தெற்கு காவல்துறை கைது செய்தது. இது தொடர்பாக குற்ற எண் 27/21 பிரிவு 354(a), 294(b), 323, 506(1) பிரிவுகளின் கீழ் காரைக்குடி தெற்கு காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அவர், 10ஆம் தேதி விசாரணைக் கைதியாக திருப்புத்தூர் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று (16.03.2021) மதிய வேளையில் கிளைச்சிறையிலிருந்த விசாரணைக் கைதி நீலகண்டனுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கிறது. அதனால், அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைகாக அவர் அழைத்து செல்லப்பட்டுள்ளார். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு கூடுதல் மற்றும் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை மருத்துவமனை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் சிவகங்கை மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே நீலகண்டன் மரணமடைந்துள்ளார். மரணமடைந்த நீலகண்டனுக்கு இரண்டு மனைவிகளும், 6 குழந்தைகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Prisoner passes away in sivagangai

"எவ்வித நோய் நொடியுமின்றி நன்கு தேக ஆரோக்கியத்துடனே சிறைக்கு சென்றவர் எப்படி உடல்நலக்குறைவினால் இறந்திருக்க முடியும்? கிளைச்சிறையில் ஏதோ நடந்திருக்கிறது. இவரது மரணம் எங்களுக்கு சந்தேகமாக இருப்பதால் நீதிபதி தலைமையில் முழு விசாரணை நடத்தப்பட வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம்" என விசாரணைக் கைதி நீலகண்டனின் உறவினர்கள் அரசு மருத்துவமனை வளாகத்திலேயே ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். தகவலறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காரைக்குடி தெற்கு காவல்துறையினர், உறவினர்களோடு பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் காரைக்குடி விரைவு நீதிமன்ற நீதிபதி பிரபாகரன் விசாரணை நடத்தி வருகிறார். இதனால் இப்பகுதியில் மிகுந்த பரப்பரப்பு தொற்றியுள்ளது.

படம்: விவேக்

sivagangai
இதையும் படியுங்கள்
Subscribe