Prisoner passed away in viluppuram prison

Advertisment

விழுப்புரம் மாவட்டம், டி. புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் முருகன்(38). இவர், அதே கிராமத்தைச் சேர்ந்த சின்னராசு என்பவரை அடித்துக் கொலை செய்ததாக கடந்த பிப்ரவரி மாதம் போலீசார் கைது செய்தனர். இது குறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி முருகன் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற உத்தரவின்படி வேடம்பட்டு சிறையில் அடைத்தனர்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக சிறையில் இருந்து வந்த முருகன், சிறையில் இருந்தபடியே தனது குடும்பத்தினர் மூலம் நீதிமன்றத்தில் ஜாமின் பெறுவதற்கு முயற்சி செய்து வந்துள்ளார். கடந்த 2 மாதமாக ஜாமீன் கிடைக்காத சோகத்தில் சிறையில் இருந்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சிறையில் உள்ள பாத்ரூமிற்கு நேற்று மாலை 3 மணிக்கு சென்றுள்ளார். வெகு நேரமாகியும் பாத்ரூமிலிருந்து முருகன் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த சிறை வார்டன் பாத்ரூம் கதவை திறந்து பார்த்தபோது முருகன் தனது கைலியால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதை பார்த்து பதறிப்போன வார்டன், அருகில் இருந்தவர்கள் உதவியுடன் முருகனை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.

Advertisment

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் முருகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முருகன் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை கைதி இறந்தது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.