Advertisment

பரோல் கைதியை தப்பிக்க விட்ட சிறைக்காவலர் பணியிடை நீக்கம்!

The prison guard who let the parole prisoner escape was dismissed!

Advertisment

பரோல் முடிந்து சிறைக்குத் திரும்பிய ஆயுள் கைதியை தப்பிக்க விட்ட, சேலம் சிறை வார்டன் அதிரடியாக பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.

சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் ஹரி (வயது 44). கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

ஜூன் 22- ஆம் தேதி அவருக்கு மூன்று நாள்கள் பரோல் கிடைத்தது. பரோல் விடுப்பு முடிந்து, ஜூன் 25- ஆம் தேதி மாலை 06.00 மணிக்கு, சேலம் மத்திய சிறைக்கு திரும்பி இருக்க வேண்டும். அன்று மாலை 05.30 மணியளவில், சிறை நிர்வாகத்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய ஹரி, சிறிது நேரத்தில் வந்து விடுவதாக தெரிவித்துள்ளார்.

Advertisment

ஆனால் 06.00 மணிக்கு மேலாகியும் அவர் சிறைக்குத் திரும்பவில்லை. சந்தேகம் அடைந்த சிறைக்காவலர்கள், ஹரி பேசிய செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு விசாரித்தபோது, அந்த எண் வாடகை கார் ஓட்டுநர் ஒருவருடையது என்பது தெரிய வந்தது. கார் ஓட்டுநரோ, ஹரியை சிறை வாயிலில் இறக்கிவிட்டுச் சென்றதாக கூறினார்.

இதையடுத்து சிறை வாயில் அருகே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், சிறைக்கு வந்த ஹரியை, வார்டன் ராமகிருஷ்ணன், தன்னுடைய மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்றது தெரிய வந்தது.

மத்திய சிறை எஸ்.பி. கிருஷ்ணகுமார், டி.எஸ்.பி. மதிவாணன் ஆகியோர் வார்டன் ராமகிருஷ்ணனிடம் நேரில் விசாரணை நடத்தினர். ஆயுள் கைதி ஹரி, பழங்கள் வாங்க வேண்டும் என்று கூறியதாகவும், அதனால் அவரை அஸ்தம்பட்டி ரவுண்டானா வரை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றதாகவும், அங்கிருந்து ஹரி தப்பிச்சென்று விட்டதாகவும் கூறியுள்ளார்.

இதைக்கேட்டு சிறைத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். பணி நேரத்தில் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டதாக வார்டன் ராமகிருஷ்ணனை சிறைத்துறை எஸ்.பி. உடனடியாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தலைமறைவான ஹரியை தேடி வருகின்றனர்.

தப்பிச் செல்வது நோக்கமாக இருந்தால் கைதி ஹரி ஏன் சிறைக்கு குறித்த நேரத்திற்கு வந்திருக்க வேண்டும்? வார்டன் திட்டமிட்டு அவரை தப்பிக்க வைத்தாரா? என்பது குறித்தும் துறை ரீதியாக விசாரணை நடந்து வருகிறது.

அஸ்தம்பட்டி ரவுண்டானா பகுதியில் இருந்து ஹரியை அழைத்துச் சென்றது யார்? அவர் எந்த வகையில் தப்பிச்சென்றார்? அல்லது தப்பிச்செல்ல விடப்பட்டாரா? என்பதும் குறித்தும் விரிவான விசாரணை நடந்து வருகிறது. அஸ்தம்பட்டி ரவுண்டானா பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் சம்பவத்தன்று பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். இது தொடர்பாக அஸ்தம்பட்டி காவல்நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

Prison Salem
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe