
திருச்சி மாநகரில் சமீப காலமாக நடைபெறும் திருட்டு சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், திருச்சி கே.கே.நகர் பகுதிகளில் கடந்த 14.08.2021 அன்று மதியம், பூட்டியிருந்த வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக வீட்டின் உரிமையாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளைத் தேடிவந்தனர். இதனிடையே, கே.கே.நகர் பகுதிகளில் இதற்கு முன் நடந்த அனைத்து திருட்டு மற்றும் சமீபத்தில் சிறையிலிருந்து விடுபட்ட குற்றவாளிகள் பட்டியல் மற்றும் சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
அதன் அடிப்படையில் தனிப்படையினர் வாகன சோதனை மேற்கொண்டிருந்தபோது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரைப் பிடித்து விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இந்நிலையில், அவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் அவர்கள் முருகன், அபுதாகீர் என தெரியவந்தது. அதில் முருகன் பல்வேறு திருட்டு வழக்குகளில் ஈடுபட்டு சமீபத்தில் சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார் என்பதும், மற்றொரு நபரான அபுதாகீர், மாத்தூர் காவல் நிலைய பகுதியில் ஒரு கொலை வழக்கில் சிறையிலிருந்தபோது மேற்படி முருகன் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
முருகன் தனக்கு கே.கே.நகர் பகுதியில் பூட்டப்பட்ட வசதியான வீடுகளை அடையாளம் காண்பித்தால் இருவரும் சேர்ந்து கொள்ளையடித்து பெரும் லாபம் சம்பாதிக்கலாம் என திட்டமிட்டிருந்தனர். அதன் அடிப்படையில் சிறையிலிருந்து வெளிவந்த முருகன், அபுதாகீர் இருவரும் கே.கே.நகர் பகுதியில் கடந்த ஜுலை மாதம் முதல் மூன்று வழக்குகளில் கொள்ளையடித்த 14 லட்சம் மதிப்புள்ள 48 பவுன் தங்க நகைகள், ரொக்க பணம் ரூ. 25 ஆயிரம் குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்திய 2 கடப்பாறை, 1 இருசக்கர வாகனம், ஹார்டு டிஸ்க்கு உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு, இருவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.