Principal Inspection at Artist Women's Rights Program Registration Camp

Advertisment

மகளிர் உரிமைத்தொகைத்திட்டம் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்தத் திட்டத்தின் மூலம் குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டம் செயல்படுத்துவது குறித்து சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்களுடனான கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், "மகளிர் உரிமைத்தொகைத்திட்டத்திற்கு 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத்திட்டம்' எனப் பெயர் சூட்டுவது பொருத்தமாக இருக்கும்” எனத் தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து இந்தத் திட்டத்திற்குத் தகுதியான பயனாளிகளைத் தேர்ந்தெடுக்கும் வகையில் விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட்டது. இதையடுத்துப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைப் பதிவு செய்யும் முகாமைத் தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 24 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத்திட்டத்திற்கான விண்ணப்பங்களை ரேசன் கடைகள் மூலம் பதிவு செய்யும் முகாம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு மற்றும் கட்சிப் பணிகள் தொடர்பாகத்திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக நேற்று 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்குப் பயிற்சிப் பாசறை நடைபெற்றது. இதில் முதல்வர் கலந்துகொண்டு உரையாற்றினார். அதனைத்தொடர்ந்து இன்று காலை திருச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெறும் ‘வேளாண் சங்கமம் - 2023’ என்ற பெயரில் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கைத்திறந்து வைத்தார்.

Advertisment

இதனைத்தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தஞ்சாவூர் சென்றடைந்தார். அப்போது முதல்வர் மு.க. ஸ்டாலின் தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் ஒன்றியம், மனையேறிப்பட்டி ஊராட்சியில் நடைபெற்று வரும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டவிண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமிற்கு நேரில் சென்று விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது அமைச்சர்கள் கே.என். நேரு, எ.வ. வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.