ஃபெஞ்சல் புயல் காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனையொட்டி ஃபெஞ்சல் புயலினால் ஏற்பட்டுள்ள கடுமையான மற்றும் வரலாறு காணாத சேதங்களை கருத்தில்கொண்டு, உள்கட்டமைப்பு மற்றும் வாழ்வாதாரத்தை தற்காலிகமாகச் சீரமைக்க 2 ஆயிரம் கோடி ரூபாய் நிதியினை விடுவித்திடக் கோரி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியிருந்தார்.
தொடர்ச்சியாக மத்திய அரசு புயல் பாதிப்புக்கு நிவாரண நிதியை ஒதுக்குமாறு மாநில அரசு வலியுறுத்தி வந்தது. இந்நிலையில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்க மத்திய அரசு முதற்கட்டமாக 944 கோடியை விடுவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து தமிழகத்திற்கு புயல் நிவாரணமாக 944.50 கோடி ரூபாயை விடுவித்துள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்.
இந்நிலையில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட தமிழகம் வந்துள்ள மத்தியக் குழுவுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது.