Skip to main content

'பிரதமரின் உழவர் நிதி' முறைகேடு; தொகையை வசூலிக்க 170 குழுக்கள் - கடலூர் மாவட்ட ஆட்சியர் தகவல்!

Published on 09/09/2020 | Edited on 09/09/2020

 

'Prime Minister's Farmer's Fund' scam; 170 teams to collect the amount - Cuddalore District Collector Information!


கடந்த 2018ம் ஆண்டு பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூபாய் 6,000 நிதி உதவி, 2,000 ரூபாய் என மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது. அதேசமயம் இந்தத் திட்டம் ஒருசிலருக்கு மட்டுமே செயல்படுத்தப்படுவதாகவும் பல விவசாயிகள் இந்தத் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை எனவும் புகார்கள் எழுந்ததையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் பயனாளிகளை தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக மாவட்ட,  வட்டார அளவிலான வேளாண்துறை அதிகாரிகள் பயனாளிகளை தேர்வு செய்யலாம் என விதிமுறை திருத்தப்பட்டது. அதற்காக அந்தந்த பகுதி வேளாண்துறை அதிகாரிகளுக்கு ரகசிய பாஸ்வேர்டும் வழங்கப்பட்டது. வேளாண்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட வலைதள ரகசிய குறியீட்டு எண்களை  மோசடி பேர்வழிகள் திருடி விவசாயிகள் அல்லாத நபர்களிடம் பணம் வாங்கிகொண்டு பயனாளிகளாக இத்திட்டத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். அதையடுத்து பலரது கணக்குகளில் 2000 ரூபாய் முதல் தவணையாக 3 மாதங்களுக்கு முன்பு வரவு வைக்கப்பட்டுள்ளது. 
 


கடந்த ஜுலை மாதம் இரண்டாவது தவணை தொகை ரூபாய் 2000 வரவு வைக்கப்பட்டது. இதனிடையே இந்த திட்டத்தில் கடலூர், விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், பெரம்பலூர், கரூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் விவசாயிகள் அல்லாதவர்களிடம் பணம் வாங்கிகொண்டு பெயர்கள் முறைகேடாக சேர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக கடலூர் மாவட்டத்தில்  இந்தத் திட்டத்தில் 1.79 லட்சம்   விவசாயிகள் சேர்க்கப்பட்டு பயன்பெற்று வரும் நிலையில் கடந்த சில மாதங்களில் புதிதாக 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது.  இவர்களது வங்கி கணக்கிலும் 2,000 ரூபாய் பணம் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசின் கோடிக்கணக்கான ரூபாய்கள் முறைகேடாக பல்வேறு நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.  மாவட்டம் முழுவதிலும் இதுபோன்ற பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்ததையடுத்து விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டு நடைபெற்று வருகின்றன. வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை மற்றும் காவல்துறை இணைந்து விசாரணை மேற்கொண்டதில் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்ட 80,237 பேரில் 40 ஆயிரம் பேர் கடலூர் மாவட்டத்தை சார்ந்தவர்கள் என்றும்,  40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திருவள்ளூர் உள்ளிட்ட பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்தது. இதில் கடலூர் மாவட்டத்தில் சேர்க்கப்பட்ட 40 ஆயிரம் பேரில் 4 ஆயிரம் பேர் மட்டுமே உண்மையான பயனாளிகள் என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்தது.  அதையடுத்து முறைகேடாக சேர்க்கப்பட்டவர்களை பட்டியலில் இருந்து நீக்கி அவர்களின் வங்கிக் கணக்குகளும் உடனடியாக முடக்கப்பட்டுள்ளன.  போலி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் அரசு செலுத்திய பணத்தை வசூலிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. அதன்படி மாவட்டத்திலுள்ள வங்கிக் கிளைகளில் தலா ஒரு அலுவலர் நியமிக்கப்பட்டு போலி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை மாவட்ட ஆட்சியரின் பொதுக்கணக்குக்கு மாற்றும் பணி நடைபெற்றுவருகிறது.  இதுவரை சுமார் 5 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 


வங்கிக் கணக்கிலிருந்து பி.எம்.கிஸான் பணத்தை எடுத்தவர்களிடம் தொகையைத் திரும்ப பெற வருவாய் மற்றும் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் போலி பயனாளிகளின் வங்கிக்கணக்கில் திட்ட நிதி செலுத்தப்பட்டு அவர் அதனை எடுத்திருந்தால் அவரது மற்றொரு வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  இதனிடையே விசாரணைகளை தீவிரப்படுத்தும் விதமாக சி.பி.சி.ஐ.டி போலீசார் வசம் வழக்கு மாற்றப்பட்டு சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். 

 

'Prime Minister's Farmer's Fund' scam; 170 teams to collect the amount - Cuddalore District Collector Information!

 

இந்நிலையில் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சகாமூரி செய்தியாளரிடம் கூறியதாவது, “பிரதமரின் உழவர் நிதி உதவி திட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் 80,237 பேர் பயனாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் 35,251 பேர் மோசடியாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதேபோல் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 43,275 பேர் போலியாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 3,483 பேர் மட்டுமே உண்மையான பயனாளிகள் ஆவர். போலியாக சேர்க்கப்பட்டுள்ள 70,209 பேரிடம் தவணைத் தொகை வசூல் செய்ய வேண்டியுள்ளது. இந்தத் திட்டத்தில் மொத்தமாக கடலூர் மாவட்டத்தில் ரூபாய் 14 கோடியே 26 லட்சம் மோசடி நடைபெற்றுள்ளது. இதில் 5 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 9.26 கோடி வசூல் செய்ய வேண்டியுள்ளது.  முன்னதாக போலி பயனாளிகள்  கணக்கு வைத்துள்ள 226 வங்கி கிளைகள் கண்டறியப்பட்டு 176 அதிகாரிகள் மூலம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

 

 

தற்போது 220 கிராமங்களில் இருந்து போலி பயனாளர்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து தவணைத் தொகை வசூலிப்பதற்காக வருவாய்த்துறை, காவல்துறை, விவசாய துறைகளை சேர்ந்த அதிகாரிகள் அடங்கிய 170 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் விரைவில் மீதமுள்ள தொகையை வசூல் செய்வார்கள். இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. முதல் கட்டமாக 3 பேர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சிலர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்படுகிறது. முறைகேட்டில் ஈடுபட்ட அனைவர் மீதும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நடவடிக்கைகளின்போது உண்மையான பயனாளிகளின் கணக்கிலிருந்து தவணைத் தொகை பறிமுதல் செய்யப்பட்டிருந்தால் அது குறித்து அவர்கள் முறையிடலாம். அந்தத் தொகை அவர்களுக்கு முறையாக வழங்கப்படும்" என குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.