ADVERTISEMENT

தமிழை நேசிப்பதாக பிரதமர் பெருமிதம்; விவேகானந்தர் இல்லத்தில் பேச்சு

06:16 PM Apr 08, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள பிரதமர் மோடி தமிழகத்தில் ரூ.5000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்கிறார்.

முன்னதாக ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் இரண்டு நாள் பயணமாக சென்னை வந்துள்ள பிரதமருக்கு விமான நிலையத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இவர்களைத் தொடர்ந்து அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரும் பிரதமரை வரவேற்றனர். மோடியின் வருகையால் சென்னை விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் ரூ.2,467 கோடியில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த டெர்மினல் கட்டடத்தை திறந்து வைத்தார். பின் ஹெலிக்காப்டர் மூலம் அடையாறு வந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக செண்ட்ரல் ரயில் நிலையம் வந்த பிரதமர் மோடி சென்னை கோவை இடையேயான வந்தேபாரத் ரயில் சேவையை துவக்கி வைத்தார்.

இதன் பின்னர் சென்னை காமராஜர் சாலையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில் நடைபெறும் ராமகிருஷ்ண மடத்தின் 125 ஆவது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். பாதுகாப்பு காரணங்களுக்காக ராமகிருஷ்ணா மடத்தின் 125 ஆவது ஆண்டு விழா விவேகானந்தர் இல்லத்திற்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில் பிரதமர் மோடி அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்குள்ள விவேகானந்தர் சிலைக்கு மரியாதை செலுத்திய பின் உரையாற்றிய மோடி, தமிழ் மக்கள் மீது தனக்கு மிகுந்த ஈர்ப்பு இருப்பதாகவும், தான் தமிழ் மொழியை; தமிழ் கலாச்சாரத்தை மிகவும் நேசிப்பதாகவும் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், திருவள்ளுவரின் திருக்குறள் ஒன்றையும் மேற்கோள் காட்டினார். ராமகிருஷ்ண மடம் தமிழகத்தில் உள்ளது போல் பல்வேறு இடங்களில் செயல்படு வருகிறது என்றும் அவை கல்வி, நூலகங்கள், தொழுநோய் விழிப்புணர்வு, மருத்துவம், ஆன்மிகம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகின்றது என்றும் கூறினார். கன்னியாகுமரியில் உள்ள புகழ்பெற்ற பாறையில் தான் விவேகானந்தர் தன் வாழ்க்கைக்கான நோக்கத்தை கண்டறிந்தார். அதன் தாக்கம் சிகாகோவில் உணரப்பட்டது.

இந்த நூற்றாண்டு இந்தியாவுக்கானது என பல்வேறு நிபுணர்களும் கூறி வருகின்றனர். ஒவ்வொரு இந்தியரும் தமக்கான நேரம் வந்துவிட்டதாகவே உணருகின்றனர். சர்வதேச நாடுகளை நம்பிக்கையுடனும் மரியாதையுடனும் எதிர்கொண்டு வருகிறோம். பெண்கள் ஒவ்வொரு நாளும் தடைகளைத் தகர்த்து புதிய வரலாறுகளை படைத்து வருகின்றனர் என பிரதமர் மோடி கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT