Skip to main content

பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில், பிரதமர் மோடி இன்று சென்னை வருகை!

Published on 12/04/2018 | Edited on 12/04/2018


சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகேயுள்ள திருவிடந்தையில் ராணுவ தளவாட கண்காட்சி நடைபெறுகிறது. இந்த ராணுவ கண்காட்சியை முறைப்படி தொடங்கி வைக்க டெல்லியிலிருந்து சென்னைக்கு புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி.

நேற்று தொடங்கிய இந்த கண்காட்சி 14-ந் தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது. ராணுவ கண்காட்சி நேற்று தொடங்கினாலும், அதன் தொடக்க விழா இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, ராணுவ கண்காட்சியை முறைப்படி தொடங்கி வைத்து பார்வையிடுகிறார்.

மேலும் அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தின் வைர விழா கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர், கிண்டி ஐ.ஐ.டி.யில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிக்க இருக்கிறார்.

இதற்காக பிரதமர் மோடி, டெல்லியில் இருந்து இன்று காலை சென்னை வருகிறார். டெல்லியில் இருந்து இன்று காலை 6.40 மணி அளவில் தனி விமானத்தில் புறப்பட்ட அவர், காலை 9.20 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வந்தடைகிறார்.

பின்னர் அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம், காலை 9.50 மணி அளவில் மாமல்லபுரம் போய்ச்சேரும் அவர், அங்குள்ள ஹெலிபேடு தளத்தில் இருந்து காரில் புறப்பட்டு, காலை 10 மணிக்கு கண்காட்சி நடைபெறும் திருவிடந்தை சென்று அடைகிறார். அங்கு ராணுவ கண்காட்சியை தொடங்கி வைத்து பேசுகிறார். இந்த தொடக்க விழா மதியம் 12 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தொடக்க விழா நிகழ்ச்சி முடிந்தவுடன் மதியம் 12.05 மணிக்கு கார் மூலம் மாமல்லபுரம் ஹெலிபேடு தளத்துக்கு வரும் மோடி, அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மதியம் 12.40 மணிக்கு சென்னை பழைய விமான நிலையத்தை வந்து அடைகிறார்.

பின்னர் மதியம் 1 மணி முதல் 1.30 மணி வரை நடைபெறும் அடையாறு புற்றுநோய் சிகிச்சை மைய வைர விழா கட்டிடத்தின் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். அதன்பிறகு சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கிறார். அதன்பிறகு 2.05 மணி அளவில் புறப்பட்டு 2.20 மணிக்கு விமான நிலையம் போய்ச் சேரும் பிரதமர் மோடி, அங்கிருந்து 2.25 மணிக்கு தனி விமானம் மூலம் புறப்பட்டு டெல்லி செல்கிறார்.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் எதிர்க்கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் போராட்டங்களை தீவிரமாக நடத்தி வரும் நிலையில், பிரதமர் இன்று சென்னை வருகிறார். எனவே அவருக்கு கருப்பு கொடி காட்டப் போவதாக தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகளான காங்கிரஸ், ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் அறிவித்து உள்ளன.

எனவே பிரதமர் மோடியின் வருகையையொட்டி, சென்னை நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

சென்னை விமான நிலையத்துக்கு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. விமானநிலையத்துக்கு வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.

டெல்லியில் இருந்து தேசிய பாதுகாப்புப்படை டி.ஐ.ஜி. சர்மா தலைமையில் 60 பேர் அடங்கிய குழுவினர் நேற்று காலை சென்னை வந்தனர். அவர்கள் அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையம், திருவிடந்தை ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

சார்ந்த செய்திகள்