Advertisment

புதுச்சேரிக்கு வரும் மோடி.! கருப்புக்கொடி காட்டப் போவதாக சமூக அமைப்புகள் அறிவிப்பு..!

Prime Minister Narendra Modi visiting pondicherry

பிரதமர் நரேந்திர மோடி, இன்று (25.02.2021) புதுச்சேரியில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். மேலும் பல்வேறு திட்டங்களையும் தொடங்கி வைக்க உள்ளார்.

Advertisment

புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டசபையில் காங்கிரஸ் அரசின் மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம் தோல்வியடைந்ததால், நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை ராஜினாமா செய்தது.அரசும் கவிழ்ந்தது. இந்தப் பரபரப்பான சூழ்நிலையில் நரேந்திர மோடி இன்று புதுச்சேரிக்கு வருகை தர உள்ளார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக புதுச்சேரி லாஸ்பேட்டைக்கு வரும் அவர், அங்கிருந்து காரில் பயணித்து ஜிப்மர் வளாகத்தில் உள்ள அப்துல்கலாம் அரங்கில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைக்க உள்ளார்.

Advertisment

விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையே ரூ.2,426 கோடி செலவிலான நான்குவழிச் சாலை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் ரூ.491 கோடி செலவில் காரைக்காலில் ஜிப்மர் மருத்துவமனை கிளையை ஆகஸ்ட் மாதத்திற்குள் முடித்து வைப்பதற்கான பணிகளைத் தொடங்கி வைக்கிறார். அத்துடன் சாகர்மாலா திட்டத்தின் கீழ் ரூ.44 கோடி செலவில் புதுச்சேரி துறைமுக விரிவாக்கப் பணிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். இதன் மூலம் சென்னை - புதுச்சேரி இடையே சிறிய ரக சரக்கு கப்பல் சேவை தொடங்கப்பட உள்ளது. அதேபோல் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் ரூ.7 கோடி செலவில் 400 மீட்டர் செயற்கை ஓடுபாதை அமைக்கும் திட்டம், ஜிப்மர் மருத்துவமனையில் ரூ.28 கோடி செலவில் அதிநவீன ஆராய்ச்சி வசதிகள் மற்றும் பயிற்சி மையங்கள் உள்ளடக்கிய ரத்த வங்கி அமைக்கும் பணிகளையும் தொடக்கி வைக்கிறார்.

லாஸ்பேட்டையில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 100 படுக்கை வசதிகள் கொண்ட மகளிர் விடுதியைத் திறந்து வைக்கிறார். கடற்கரை சாலையில் ரூ.14.83 கோடி செலவில் பழங்காலத்தில் இருந்த மேரி கட்டடம், அதே முறையில் புதுப்பிக்கப்பட்டதையும் திறந்துவைக்கிறார். ஜிப்மர் அரங்கத்தில் இருந்தபடியே வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் புதுச்சேரியிலும் சுயசார்பு இந்தியா திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு அங்கிருந்து மீண்டும் காரில் பயணித்து லாஸ்பேட்டை ஹெலிபேட் மைதானத்தில் 12 மணிக்கு நடைபெறும் பா.ஜ.க தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். நரேந்திர மோடியின் வருகையையொட்டி லாஸ்பேட்டை மைதானம் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் அவ்வப்போது சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் வந்து செல்லும் வழித்தடங்களில் சாலையோர தடுப்புக் கட்டைகள் கட்டப்பட்டு சாலைகளைசீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. கூடுதல் பாதுகாப்புக்கு துணை ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.

பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி மற்றும் அ.தி.மு.க, பா.ஜ.க கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசுவார் என தெரிகிறது. இதில் முதலமைச்சர் வேட்பாளர், தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு ஆகியவை குறித்தும் பேசப்பட்டு, இறுதி முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், பா.ஜ.க மேலிட பொறுப்பாளர், சமீபத்தில், “நமச்சிவாயம் தலைமையில் நல்லாட்சி அமைப்போம்” என்று தெரிவித்திருந்தார். இதனால், அதிருப்தியில் இருக்கும் ரங்கசாமி, இதில் பங்கேற்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது.

Prime Minister Narendra Modi visiting pondicherry

இதனிடையே, புதுச்சேரிக்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட்டப்போவதாக பல்வேறு சமத்துவ சமூக ஜனநாயக இயக்கங்கள் அறிவித்துள்ளது. மேலும் அந்த இயக்கங்கள், ‘புதுச்சேரி மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை சூழ்ச்சிகள் மூலமாக கவிழ்த்து ஜனநாயக படுகொலை செய்து, நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களின் 10% உள் ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டிமற்றும் புதுச்சேரி - தமிழகத்தை சுடுகாடாக்கும் பாசிச பா.ஜ.க மோடி அரசை கண்டித்து கருப்புக் கொடி காட்டுவோம்’ என அறிவித்திருப்பது பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

Narendra Modi Pondicherry
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe