அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்த மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை நாளான 23ஆம் தேதி முதல் முப்பெரும் அரசு விழாவாக ராஜேந்திர சோழனால் வடிவமைக்கப்பட்ட சோழேஸ்வரர் ஆலய வளாகத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ராஜேந்திர சோழனின் 1000வது பிறந்த நாளான முப்பெரும் விழாவின் கடைசி நாளான நாளை (27.07.2025) பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள உள்ளார். இதற்காகத் தமிழக அரசு மற்றும் பா.ஜ.க. சார்பில் செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடி 2 நாள் பயணமாக இன்று (26.07.2025) தமிழகம் வருகை தர உள்ளார். அதன்படி அவர் இன்று இரவு 07:50 மணியளவில் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தருகிறார். அதனைத் தொடர்ந்து 451 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய விமான நிலையத்தை இரவு 08:30 மணியளவில் பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளார். இந்நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி தூத்துக்குடியில் இருந்து தனி விமானம் மூலம் இரவு 09:40 மணிக்குத் திருச்சி புறப்பட்டுச் செல்கிறார். அங்குள்ள தனியார் விடுதி ஒன்றில் இரவு தங்கி ஓய்வெடுக்கிறார். அதனைத் தொடர்ந்து நாளை திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நன்பகல் 12 மணிக்குக் கங்கைகொண்ட சோழபுரம் செல்கிறார்.
அங்கு ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். அதனைத் தொடர்ந்து கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் வழிபாடு செய்கிறார். இந்தியத் தொல்லியல் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தையும் வெளியிட உள்ளார். அதே சமயம் பிரதமர் மோடி முன்னிலையில் இசையமைப்பாளர் இளையராஜா இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளார். இதற்காகக் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள அரசுப் பள்ளி வளாகத்தில் தற்காலிக ஹெலிப்பாடு அமைக்கப்பட்டது. இதில் பிரதமர் வருகைக்கு முன்னதாக சிறப்பு பாதுகாப்புப் படையினர் கடற்படையின் ஹெலிகாப்டர் மூலம் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
அப்போது ஹெலிபேட் அருகில் அதி மின் அழுத்த கேபிள்கள் செல்வது கண்டறியப்பட்டது. அதோடு பள்ளி வளாகத்தில் கட்டடம் இருக்கும் பகுதிகளில் ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளதால் காற்றின் திசைவேகம் பாதிக்கப்படும் என்றும் இதனால் ஹெலிப்பேட்டில் விபத்து ஏற்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக ராஜேந்திர சோழனால் அமைக்கப்பட்ட சோழகங்கம் ஏரியில் புதிய ஹெலிபேட் அமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இந்த தற்காலிக ஹெலிபாட் தளம் கோவிலில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. பிரதமர் மோடி திருச்சியில் இருந்து 11.50க்கு புறப்பட்டு 12 மணி அளவில் ஹெலிபேட் தளத்தில் வந்து வந்து இறங்க உள்ளார்.