அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்த மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை நாளான 23ஆம் தேதி முதல் முப்பெரும் அரசு விழாவாக ராஜேந்திர சோழனால் வடிவமைக்கப்பட்ட சோழேஸ்வரர் ஆலய வளாகத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ராஜேந்திர சோழனின் 1000வது பிறந்த நாளான முப்பெரும் விழாவின் கடைசி நாளான நாளை (27.07.2025) பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள உள்ளார். இதற்காகத் தமிழக அரசு மற்றும் பா.ஜ.க. சார்பில் செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடி 2 நாள் பயணமாக இன்று (26.07.2025) தமிழகம் வருகை தர உள்ளார். அதன்படி அவர் இன்று இரவு 07:50 மணியளவில் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தருகிறார். அதனைத் தொடர்ந்து 451 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய விமான நிலையத்தை இரவு 08:30 மணியளவில் பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து விமான நிலையத்தைப் பார்வையிடுகிறார். அதோடு 4800 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் 3600 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ரயில் மற்றும் சாலை திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் சரக்குகளை கையாளுவதற்கான புதிய முனையத்தையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
இந்நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி தூத்துக்குடியில் இருந்து தனி விமானம் மூலம் இரவு 09:40 மணிக்குத் திருச்சி புறப்பட்டுச் செல்கிறார். அங்குள்ள தனியார் விடுதி ஒன்றில் இரவு தங்கி ஓய்வெடுக்கிறார். அதனைத் தொடர்ந்து நாளை திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நன்பகல் 12 மணிக்குக் கங்கைகொண்ட சோழபுரம் செல்கிறார். அங்கு ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். அதனைத் தொடர்ந்து கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் வழிபாடு செய்கிறார். இந்தியத் தொல்லியல் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தையும் வெளியிட உள்ளார்.
அதே சமயம் பிரதமர் மோடி முன்னிலையில் இசையமைப்பாளர் இளையராஜா இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளார். இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிற்பகல் 02.25 மணிக்கு மீண்டும் திருச்சி செல்லும் பிரதமர் மோடி அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். பிரதமர் மோடி இந்த பயணத்தின் போது 200 பேரைச் சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக முன்னாள் மாநில தலைவர்கள் என 200 பேரை 13 இடங்களில் சந்திக்க உள்ளார்.
முன்னதாக தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் பிரதமரைச் சந்திக்க வேண்டும் என்று பிரதமருக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதில் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வரும்போது அங்கேயே அவரை சந்திக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி இன்று இரவு திருச்சியில் சந்தித்துப் பேச உள்ளார். அதே போன்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனும் பிரதமர் மோடியை இன்று சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளார் எனத் தகவல் வெளயாகியுள்ளது.