முதல்வரிடம் உடல்நிலை குறித்து நலம் விசாரித்தார் பிரதமர் மோடி!

mks-narendramodi-hand

கோப்புப்படம்

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் வழக்கமாக மேற்கொள்ளும் நடைப்பயிற்சியில் இன்று (21.07.2025) ஈடுபட்டிருந்தார். அப்போது அவருக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னை கிரிம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்குத் தேவையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இது குறித்து தகவல் அறிந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், மா. சுப்பிரமணியன் மற்றும் எம்.எல்.ஏ நாகநாதன் உள்ளிட்ட பலரும் மருத்துவமனைக்குச் சென்று முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் நலம் விசாரித்தனர். 

அதன் பின்னர் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர், “முதல்வர் மு.க. ஸ்டாலின் நலமுடன் உள்ளார். விரைவில் வீடு திரும்புவார்” எனத் தெரிவித்தார். இதற்கிடையே கள ஆய்வு நிகழ்ச்சி, ரோடு ஷோ உள்ளிட்ட நிகழ்ச்சிக்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை (22.07.2025) மற்றும் நாளை மறுநாள் (23.07.2025) மேற்கொள்ளவிருந்த திருப்பூர் மாவட்ட பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. முதல்வர் மு.க. ஸ்டாலின் 2 நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவமனை தரப்பில் அறிவுறுத்தியதால் திருப்பூர் பயணம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உடல்நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி தொலைப்பேசி வாயிலாக நலம் விசாரித்தார். முன்னதாக அடுத்த 3 நாட்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மருத்துவமனையில் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.  இது தொடர்பாக மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “முதல்வர் மு.க. ஸ்டாலின் லேசான தலைச்சுற்றல் தொடர்பான அறிகுறிகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மேலும் மூன்று நாட்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அவரது உடல் நிலை குறித்து அறிய வேறு சில பரிசோதனைகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அவர் மருத்துவமனையில் தங்கியிருக்கும் நாட்களில் தனது அரசு அலுவல் சார்ந்த பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

hospital mk stalin Narendra Modi
இதையும் படியுங்கள்
Subscribe