ADVERTISEMENT

அர்ச்சகர்கள் இயந்திரத்தனமாக பணியாற்றியிருக்கிறார்களே தவிர தெய்வீக பணியை ஆற்றவில்லை- நீதிபதிகள் வேதனை!!

07:05 PM Sep 18, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

ADVERTISEMENT

சிலைகள் காணாமல் போனது குறித்து அரசு கவனத்துக்கு கொண்டு செல்லாமல் அர்ச்சகர்கள் இயந்திரதனமாக பணியாற்றுகிறார்களே தவிர தெய்வீக பணியை ஆற்றவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் புன்னைவனநாதர் சன்னதியில் லிங்கத்தை பூஜிக்கும் மயில் சிலை காணாமல் போனதால், புதிய சிலை வைத்து கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிட வேண்டும் என ரங்கராஜன் நரசிம்மன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது "வாயில் பூவுடன் கூடிய மயில் சிலை காணாமல் போனதாகவும், ஆனால் தற்போது வாயில் பாம்புடன் இருப்பது போன்ற சிலை வைக்கப்பட்டிருப்பதாகவும், இது ஆகமத்துக்கு எதிரானது எனவும் மனுதாரர் வாதிட்டார்.

கோவில் நிர்வாகத்தின் அறங்காவலர்களையும், செயல் அதிகாரியையும் நீக்கிவிட்டு, கோவில் முறையாக நிர்வகிப்பதை உறுதி செய்ய உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆகம வல்லுனர்கள், சட்டவல்லுனர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழுவை நியமிக்க வேண்டும் எனவும் மனுதாரர் கோரிக்கை விடுத்தார்.

சிலை மாறியிருப்பது குறித்து அர்ச்சகர்கள் அரசின் கவனத்துக்கு ஏன் கொண்டு செல்லவில்லை... அது அவர்கள் கடமை எனத் தெரிவித்த நீதிபதிகள், அர்ச்சகர்கள் இயந்திரத்தனமாக பணியாற்றியிருக்கிறார்களே தவிர தெய்வீக பணியை ஆற்றவில்லை என வேதனை தெரிவித்தனர்.

அப்போது அறநிலைய துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இதுசம்பந்தமாக விசாரணை நடந்து வருவதாகவும், மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்கவும் கோரினார்.இதை ஏற்ற நீதிபதிகள், மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க இந்துசமய அறநிலைய துறைக்கு உத்தரவிட்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT