/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/165_41.jpg)
‘அனைத்து சாதி அர்ச்சகர் திட்டத்தில் பாலின வேறுபாட்டைத்தகர்த்து, ஈராயிரம் ஆண்டுகளாக இந்தியா காணாத மாபெரும் சமூகப் புரட்சியை நிகழ்த்தியசமூகநீதிச் சுடரொளி மு.க. ஸ்டாலினுக்கு தந்தை பெரியார் பிறந்த சமூக நீதி நன்நாளில் நன்றிகள் கோடி!’ என அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள்சங்கம் – தமிழ்நாடு மற்றும் தமிழ்நாடு அரசு நியமன அர்ச்சகர்கள் சங்கம்கீழ்க்கண்டவாறு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அனைத்து சாதியினரும் அர்ச்சராகும் திட்டத்தில் ஒரு மாபெரும் புரட்சியைத்திராவிட முன்னேற்றக் கழகஅரசு நிகழ்த்தியுள்ளது. தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளாக கலைஞர் வேதனை தெரிவித்த அனைத்து சாதி அர்ச்சகர் பிரச்சினை, கடந்த 50 ஆண்டுகளாகத்தொடர்ந்து நீடித்துவரும் பிரச்சினையாக உள்ளது. 1969ல் கருவறைத் தீண்டாமையை ஒழிக்க தந்தை பெரியார் போராட்டம் அறிவித்ததைத் தொடர்ந்து, பரம்பரை வழி அர்ச்சகர்முறையை ஒழித்து கலைஞர் சட்டம் இயற்றினார். அதனை எதிர்த்து சேஷம்மாள் உள்ளிட்ட பிராமணர்கள் உச்ச நீதிமன்றம் சென்றனர்.
1972ல் சேஷம்மாள் தீர்ப்பு வந்தாலும், ஆகமத்தை மீறக்கூடாது என்றும் தீர்ப்பில் சொன்னதால், அர்ச்சகர் நியமனம் செய்ய இயலவில்லை. தொடர்ந்து 2006 ஆம் ஆண்டில் மீண்டும் கலைஞர் அர்ச்சகர்பயிற்சிப் பள்ளியைத்தொடங்கியதால் 2007 மாணவர்கள் ஆகமம், வேதம், மந்திரம் கற்று தீட்சை பெற்றனர்.மீண்டும் உச்ச நீதிமன்றம் சென்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சிவாச்சாரியார்கள் தடை வாங்கினர். 2009ல் அர்ச்சகர் பயிற்சி முடித்த பிறகு, அனைத்து அரசியல் கட்சிகளையும், இந்து மத அமைப்புகள் சார்ந்த கட்சிகளையும் சந்தித்து எங்களின் பிரச்சினைகளைக் கூறினோம். ஆனால், இந்து அமைப்புகள்யாரும் எங்களுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. எங்களுக்கு திராவிட இயக்கங்களும்,கம்யூனிஸ்ட் அமைப்புகளும், முற்போக்கு அமைப்புகளும், மக்கள் உரிமை பாதுகாப்பு மையமும், மக்கள் கலை இலக்கிய கழகம் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்தன.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/885_6.jpg)
எங்களுடைய வழக்குக்காக தெருமுனைகளிலும்,பேருந்து நிலையங்களிலும், கடை வீதிகளிலும், சாலைகளிலும், அனைத்து இடங்களிலும் வசூல் செய்தும், கருவறையில் தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்பதற்கான உண்ணாவிரதப் போராட்டம், சாலை மறியல், கருவறையில் நுழையும் போராட்டம் போன்ற அனைத்துப் போராட்டங்களில் ஈடுபட்டும், தற்போது வரை எங்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இவர்கள்தான் பெரும்பான்மையான இந்துக்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் படிக்கும்போது நாங்கள் அனைவரும் சாதி ரீதியாக அவமானப்பட்டு, அசிங்கப்படுத்தப்பட்டோம். எங்களுக்குப் பயிற்சி கொடுத்த தலைமையாசிரியர் மற்றும் ஆகம ஆசிரியர் தாக்கப்பட்டனர்.இவ்வாறு பல இடையூறுகளைக் கடந்து, ஆகமக் கோயில்களில் முறையாகத்தமிழ்முறைப்படி, சமஸ்கிருத, வேத மந்திரங்களும் முறைப்படி கற்று தீட்சை பெற்றோம்.இன்றுஆகமக் கோயில்களில் பூஜை செய்வதற்கான தகுதியோடு நாங்கள் இருக்கிறோம்.
2015 ஆம் ஆண்டு தீர்ப்பு வந்தது. அதிமுக ஆட்சியில் அர்ச்சகர் நியமனம் நடைபெறவில்லை. 2021இல் முதல்வராகப் பொறுப்பேற்ற மு.க. ஸ்டாலின், ஆகஸ்ட் 14 அன்று பதவியேற்ற நூறாவது நாளில், அனைத்து இந்துக்களையும் ஆகமக் கோயில்கள் உள்ளிட்ட பல தமிழக கோயில்களில் அர்ச்சகர்களாகநியமித்தார். பெண் ஓதுவாரையும் நியமித்தார். இதனை எதிர்த்தும், அர்ச்சகர் விதிகளை எதிர்த்தும் 30க்கும் மேலான வழக்குகள் தொடுக்கப்பட்டன. திருக்கோயில்களில் பணி நியமனம் செய்யப்பட்ட 24 அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி மாணவர்களைச் சாதி ரீதியாக அவமானப்படுத்துவதும், கொச்சை சொற்களைக் கொண்டு பேசுவதும், கொலை மிரட்டல் விடுவதுமான செயல்களைப் பிராமணர்களும், பிஜேபி, ஆர்.எஸ்.எஸ், விஷ்வ இந்து பர்ஷத் போன்ற இந்து அமைப்புகள் செய்து வந்தன. தொடர்ச்சியாக 2021 முதல் மிரட்டல் விடுக்கப்பட்டு, இதில் 5 மாணவர்கள் தற்கொலை செய்வதற்கு முடிவெடுத்ததாகவும், 5 மாணவர்கள் பணியை விட்டுச் செல்வதாகவும் கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து,26.03.2022 முதல் இன்று வரை தமிழ்நாடுமுதலமைச்சரும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும்இதற்குத் தீர்வு காணும் வகையில், உடனடியாக நடவடிக்கை எடுத்ததால், தற்போது பணி நியமனம் செய்யப்பட்ட அனைத்து அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி மாணவர்களும் திருக்கோயில்களில் பணிபுரிந்து வருகின்றனர். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் கீழ் பயின்ற மாணவர்கள் மூலம் இந்தத்திட்டம் நிறைவேறக்கூடாது என்பதற்காக, பிஜேபி, ஆர்.எஸ்.எஸ், விஷ்வ இந்து பர்ஷத் போன்ற இந்துஅமைப்புகள், பயிற்சி பெற்ற மாணவர்களுக்கும், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்திற்கும்,கொலை மிரட்டல்கள் விடுத்தும், அச்சுறுத்தியும், சமூக வலைத்தளங்களில் அவதூறுகள் பரப்பியும்வருகின்றன. உச்சநீதி மன்றத்திலும், உயர்நீதி மன்றங்களிலும் 50க்கும் மேற்பட்ட வழங்குகள் மாதந்தோறும் வந்த வண்ணம் உள்ளன. கருவறையில் தீண்டாமையை உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்காகப் பல இந்து அமைப்புகள், பல எதிர்ப்புகளும் தடைகளும் செய்து வருகின்றனர். இதுதான்சனாதனம். அந்த வழக்குகள் இந்து சமய அறநிலையத்துறையால் முறியடிக்கப்பட்ட நிலையில், திருச்சி வயலூர்முருகன் கோவில் அர்ச்சகர் நியமனத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
மதுரைஉயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் குறிப்பிட்ட denomination என்று சொல்லக்கூடிய மத உட்பிரிவினரைத் தவிர மற்றவர்களை ஆகமக் கோயில்களில் அர்ச்சகராக நியமிக்க முடியாது எனச் சொல்லி அர்ச்சகர் நியமனத்தை ரத்து செய்தார். அதற்கு எதிராக இந்து சமயஅறநிலைத்துறை சார்பில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டு தடையாணை பெறப்பட்டுள்ளது. அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் 2022 – 2023 ஆம் ஆண்டு இரண்டாம் ஆண்டு மாணவர்கள் இட ஒதுக்கீடு அடிப்படையில் OC (4), BC (38), MBC (31) மற்றும் SC (21) ஆகும்.இச்சூழலில் மீண்டும் அர்ச்சகர்பயிற்சிப் பள்ளிகளுக்கு உயிர் கொடுக்கப்பட்டு 94 பேர்,குறிப்பாக மூன்று மாணவிகள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு ஓராண்டு அர்ச்சகர் படிப்பை, சென்ற வாரம் முடித்து சான்றிதழ்கள் பெற்றுள்ளனர்.தற்போது நடப்பு கல்வியாண்டு 2023 – 2024 ஆம் ஆண்டில் 111 மாணவர்கள் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில்பயின்று வருகின்றனர். இவற்றில் 11 மாணவிகள் ஸ்ரீரங்கம், அருள்மிகு அரங்கநாதசுவாமிதிருக்கோயிலில் பயின்று வருகின்றனர். அர்ச்சகர் நியமனங்களிலும், அர்ச்சகர் பயிற்சிகளிலும் பாலின சமத்துவத்தை உருவாக்க “கரு சுமக்கும் பெண்களும் இனி கருவறைக்குச் செல்லலாம்” எனத் தமிழ்நாட்டு பெண்களைப் போற்றும் வகையில்,திருக்கோயில்களில் பாலின பாகுபாடின்றி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி மற்றும் அர்ச்சகர் பணி நியமனத்திற்குத்தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசு பல நல்ல திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. ஆனால் இதனை எதிர்த்துப் பல இந்து அமைப்பு கட்சிகளும், இந்து அமைப்புகளும் தடைகள் பல தந்து வருகிறார்கள்.
அனைத்து இந்துக்கள் அர்ச்சகர் போராட்டத்தில், கருவறை தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தில், இதுவரையிலான கோரிக்கை என்பது,அனைத்து இந்துக்களும், அதாவது அனைத்து ஆண்களும்அர்ச்சகராக வேண்டும் என்பதுதான். தற்போது நிகழ்ந்துள்ள மாபெரும் புரட்சிஎன்னவென்றால் அர்ச்சகர்நியமனத்தில் பாலின பேதமும் தகர்க்கப்பட்டுள்ளது என்பதே. 3 மாணவிகள் மாபெரும் கனவோடுஅர்ச்சகர் படிப்பை முடித்துள்ளனர். அடுத்து அர்ச்சகர்களாக நியமனம் பெறக் காத்திருக்கிறார்கள். பெண்கள் அர்ச்சகராக நியமிக்கப்பட்டால் இந்திய வரலாற்றில், ஏன் உலக வரலாற்றிலேயே மாபெரும் சமத்துவப் புரட்சியாக நிலைத்து நிற்கும். ஆனால் ஆலயங்களில் சமத்துவத்தை விரும்பாத, ஏற்கனவே கோயில்களைத்தங்களின் சொந்த சொத்தாகக் கருதும் பிராமண அர்ச்சகர்கள், இந்த மாபெரும் சமத்துவப் புரட்சியை ஏற்கவில்லை. கோயில்கள் மீதான தங்கள் அதிகாரம் பறிபோகும் எனக் கருதிப் பதறி,உடனேமதுரை உயர்நீதி மன்றத்திலும், உச்சநீதி மன்றத்திலும்,அர்ச்சகர் படிப்பு முடித்துள்ளோருக்குகோயில்களில் பயிற்சி அளிக்கக் கூடாது என்று வழக்குகள் கொடுத்துள்ளனர்.இந்த வழக்குகளை முறியடிக்க இந்து சமய அறநிலையத்துறை தீவிரமாக முயற்சித்து வருகிறது.எல்லோரும் இந்துக்கள், எல்லா இந்துக்களும் சமம், சனாதன தர்மம் எல்லா இந்துக்களையும் சமமாக கருதுகிறது என்றெல்லாம் பேசும் ஆர்எஸ்எஸ், பாஜக, விசுவ இந்து பரிசத், சங் பரிவார் அமைப்பினர், குறிப்பாக மோடி, அமித்ஷா, அண்ணாமலை போன்றோர் ஆலயங்களில் அனைத்து இந்துக்களும், குறிப்பாக இந்து பெண்களும் அர்ச்சகராவதற்கு என்றாவது பேசியுள்ளார்களா? சபரிமலையில்பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற உச்சநீதி மன்றத்தீர்ப்பை இன்று வரை நடைமுறைப்படுத்தவிடாமல் தடுக்கும் சனாதனவாதிகள் தான் ஆர்எஸ்எஸ், பாஜகவினர்.
தமிழகத்தில் மதுரை, ஸ்ரீரங்கம், திருச்செந்தூர், பழனி, திருவண்ணாமலை உள்ளிட்ட பெரிய கோயில்களில் இன்று வரை தமிழர்கள், குறிப்பாகக்கவுண்டர், தேவர், வன்னியர், செட்டியார், நாடார்,கோனார், தேவேந்திரர், ஆதிதிராவிடர், அருந்ததியர் உள்ளிட்ட எவரும் அர்ச்சகராக முடியவில்லை என்ற நிலை, சுதந்திரம் பெற்று அரசியல் சட்டம் வந்து 70 ஆண்டுகள் ஆன பின்பும் நீடிப்பதுஅவமானகரமானது. இந்த அவமானத்தைத்தமிழ்ச் சமூகத்தின் மீது சுமத்தும் கூட்டம் ஆயிரமாண்டுகாலமாக கோயில்களைத்தங்கள் அதிகார பீடமாக வைத்திருக்கும் பிராமண அர்ச்சகர்கள் தான்.
அரசிடம் சம்பளம் பெறும் இவர்கள்தான், இன்றும் இந்து சமய அறநிலைத்துறையை இயங்கவே விடாமல் நூற்றுக்கணக்கான வழக்குகள் போட்டு தடுத்து நிறுத்தி வைத்திருப்பவர்கள். தந்தை பெரியார் பிறந்த இந்நன்னாளில், தமிழக மக்கள் ஆர்எஸ்எஸ், பாஜக, பிராமண கூட்டத்தின் இரட்டை வேடத்தைப்புரிந்து கொள்ளவேண்டும். இந்து பெரும்பான்மை மக்களின் நலனுக்காக இட ஒதுக்கீடு முதல் கோயில்அர்ச்சகர் வரையிலான திட்டங்களைச் செயல்படுத்தி வருவது திராவிட இயக்கங்கள் தான்.குறிப்பாகத்திராவிட முன்னேற்றக் கழகம் தான். ஆலயங்களில், சாதி, பாலின சமத்துவத்திற்குஅரசியல் சட்டம் வலியுறுத்தும் சமத்துவ சமுதாயத்திற்காக, குறிப்பாக அரசியல் சட்டத்தில் பிரிவு 25 2(b)யின் அடிப்படையில் இந்து சமய மத நிறுவனங்களை எந்த வேறுபாடும் இன்றி அனைத்து மக்களுக்கும் திறந்து வைக்க வேண்டும் என்ற அம்பேத்கரின்கோட்பாட்டை நடைமுறைப்படுத்தும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபுவுக்கும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களுக்கும் வாழ்த்துகளையும் நன்றியையும் உரித்தாக்குகிறோம்.’ என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)