
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துவருகிறார். இவரது தந்தை சில மாதங்களுக்கு முன்பு கரோனா நோய் பாதிப்பின் காரணமாக இறந்துபோனார். தனது தாயுடன் வசித்துவந்த அந்தச் சிறுமிக்குத் திருமண ஏற்பாடுகளை செய்துள்ளனர். பரதன்தாங்கல் என்ற கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது மகன் சுதாகரன் (36) என்பவருக்கும் அச்சிறுமிக்கும் சிங்கவரம் ரங்கநாதர் கோவில் அடிவாரத்தில் வைத்து திருமணம் நடந்துள்ளது.
சிறுமியைத் திருமணம் செய்துகொண்ட சுதாகர், சாமியாடி குறிசொல்லும் பூசாரி. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 10 வயதில் ஒரு மகளும், எட்டு வயதில் ஒரு மகனும் உள்ளனர். இவர் மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்றவர். இந்த நிலையில் சுதாகரன், சிறுமியைத் திருமணம் செய்துகொண்ட தகவல் மாவட்ட சமூக நலத்துறைக்குத் தெரியவந்துள்ளது. இதையடுத்து மாவட்ட சமூக நலத்துறை ஆலோசகர்கள் விமலா, பிரியதர்ஷினி ஆகியோர் செஞ்சி மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜோதி, செஞ்சி சமூகநல அலுவலர் சுமதி, குழந்தைகள் பாதுகாப்பு சட்டப் பணியாளர் சதீஷ், சைல்டு லைன் உறுப்பினர்கள் பொன்னியம்மாள், லட்சுமிபதி ஆகியோர் கொண்ட குழுவினர் அந்தக் கிராமத்துக்கு நேரடியாகச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்தக் குழுவினர் நடத்திய விசாரணையில், 14 வயது சிறுமிக்குத் திருமணம் நடத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குழந்தைகள் திருமண தடுப்புச் சட்டத்தின்படி புகார் அளிக்கப்பட்டு வழக்குப் பதிவுசெய்தனர். சிறுமியைத் திருமணம் செய்த பூசாரி சுதாகரன், இந்த திருமணத்திற்கு உடந்தையாக இருந்த அந்தச் சிறுமியின் தாயார் ஆகியோரை கைது செய்துள்ளனர். திருமணம் செய்து வைக்கப்பட்ட சிறுமி மற்றும் சுதாகரனின் இரு குழந்தைகளையும் மீட்டு விழுப்புரத்தில் உள்ள அரசு காப்பகத்தில் சேர்த்துள்ளனர். பூசாரி, சிறுமியை திருமணம் செய்துகொண்ட சம்பவம் செஞ்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.