Skip to main content

“தேவதாசி, உடன்கட்டை, பால்ய விவாகம் வரிசையில் பட்டனப்பிரவேசம்!” - அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் குமுறல்!

Published on 07/05/2022 | Edited on 07/05/2022

 

Priest Trained Association Student statement

 

“தருமபுர ஆதீனம் இறைவனுக்குச் சமமானவரா? கடவுளைச் சுமக்கும் பல்லக்கில், மடாதிபதியைச் சுமக்க வேண்டுமா?” எனக் கேள்வி எழுப்பும் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின் தலைவர் வா.ரங்கநாதன், “ஆன்மீகத்தில் மதவெறியைக் கலந்து தமிழகத்தின் பொது அமைதியைச் சீர்குலைக்க முயலும் மன்னார்குடி ஜீயரைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்து “பட்டனப் பிரவேசத்தை தடை செய்த தமிழக அரசை அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம்  மனதாரப் பாராட்டுகிறது! தமிழக அரசின் செயல் சரியான சமத்துவ இறைப்பணி எனப் போற்றுகிறது” எனக் கூறுகிறார்.

 
தனது அறிக்கையில் வா.ரங்கநாதன்; “குன்றக்குடி ஆதீனம் முதல் தமிழகத்தின் அனைத்து ஆதீனங்களும், காலத்துக்கும், கடவுளுக்கும் ஒவ்வாதது என்று கைவிட்ட, பட்டனப் பிரவேசம் என்ற மனிதனை, மனிதன் தூக்கும் பல்லக்கு மரபை மீண்டும் கையிலெடுத்து, தமிழகத்தின் சமத்துவ மரபுக்கு எதிராக நிற்கிறார் தருமபுர ஆதீனம்.  சைவம், தமிழ் என்று பேசும் தருமபுர ஆதீனம் சிதம்பரம் நடராசர் கோயிலில் கடந்த 13 ஆண்டுகளாக நடந்துவரும், தமிழில் தேவாரம், திருவாசகம் பாடும் போராட்டத்தை ஒரு நாளும் ஆதரித்ததில்லை. தேவாரம், திருவாசகம், தமிழுக்காகப் பேசவில்லை என்பது மட்டுமல்ல, குமூடிமலை சிவனடியார் ஆறுமுகச்சாமியை, சிதம்பரம் தீட்சிதப் பார்ப்பனர்கள் தாக்கியபோதும் மவுனம் காத்தார். ஆதீனத்திற்குக் கட்டுப்பட்ட வைத்தீசுவரன் கோயில் உட்பட எந்தக் கோயிலிலும் தமிழில் குடமுழுக்கு செய்ததில்லை.  சமஸ்கிருதத்தை மட்டுமே ஆதரித்துப் பயன்படுத்தி வருகிறார்.

 
தமிழகத்தில் உள்ள அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக வேண்டி, தொடர்ந்து 50 ஆண்டுகளாக நிகழ்த்தப்பட்ட மக்கள் போராட்டத்தை இவர் கண்டுகொண்டதில்லை. தமிழ் மக்களின் பணத்தில் வாழும் தருமபுர ஆதீனம், தமிழக மக்களுக்கு எதிராகத் தொடர்ந்து செயல்பட்டு வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியை மடத்துக்கு அழைத்து விழா நடத்துகிறார். இதனைத் தொடர்ந்து ஆளுநருக்கு பாதுகாப்பில்லை எனப் பிரச்சாரம் செய்யப்படுகிறது. மதுரை ஆதீனம் ஆட்சியாளர்களுக்கு எதிராக, பா.ஜ.க ஆதரவு இராம ரவி வர்ம குமார், இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து பேசுகிறார். அவரைத் தொடர்ந்து  மன்னார்குடி ஜீயரான செண்டலங்கார ஜீயர், "பல்லக்குத் தூக்குவதைத் தடுத்தால் தமிழ்நாட்டு அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் நாட்டில் நடமாட முடியாது" என மிரட்டுகிறார். ஆதீனங்கள், பா.ஜ.க, ஆளுநர் ஆதரவு, திராவிட இயக்க எதிர்ப்பானது, ஆன்மீகத்தில் மதவெறி அரசியலைக் கலப்பதாகும். தமிழகத்தின் பொது அமைதியைச் சீர்குலைக்க முயலும் மன்னார்குடி ஜீயரைக் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.


ஆளுநர் மீதான மக்களின் எதிர்ப்பை திசைதிருப்பும் விதமாகவே, பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும், ஹெச்.ராஜாவும் பட்டனப் பிரவேச பிரச்சனையை வைத்து தமிழக அரசிற்கு எதிராகப் பேசுகிறார்கள். திமுக அரசு, சைவத்திற்கு எதிரானது போன்ற ஒரு சித்திரத்தை உருவாக்க ஆதீனமும், பாஜக-வும் இணைந்து முயற்சிக்கிறது. உண்மையில் ஆன்மீகத்தில் சமத்துவத்தை உருவாக்கி, ஆன்மீகத்தைக் காத்தது திராவிட அரசுதான். 


கோயிலில் அனைத்துச் சாதி தமிழர்களை அழைத்துச் சென்றது முதல், கருவறையில் பூஜை செய்ய வைத்தது வரையிலான வரலாற்றுச் சாதனைகளை நிகழ்த்தியது திராவிட இயக்கம்தானே தவிர, எந்த மடாதிபதியும் அல்ல. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சைவர்கள், இந்துக்களின் வழிபாட்டு, பூசை உரிமைகளுக்கு தருமபுர ஆதீனம் என்றாவது பேசியுள்ளாரா? 206 அனைத்து சாதி அர்ச்சக மாணவர்கள் ஆகமம், வேதம், தேவாரம், திருவாசகம், மந்திரங்கள் கற்று, தீட்சை வாங்கி, சான்றிதழும் பெற்று 2007 முதல் 2021-ல் தி.மு.க ஆட்சி வரும்வரை 15 வருடங்கள் சாதியால் பணி மறுக்கப்பட்டு தெருவில் நின்றோமே, அப்போதெல்லாம் தருமபுர ஆதீனம் எங்கே சென்றார்? லிங்காயத் என்ற வீர சைவ மதத்தை உருவாக்கிய கர்நாடகாவின் மாபெரும் ஆன்மீகப் புரட்சியாளர் பசவண்ணா அவர்களே, பல்லக்கில் மனிதனை, மனிதன் சுமப்பதை எதிர்த்துள்ளார். பசவண்ணா, குன்றக்குடி ஆதீன கர்த்தரைவிட தருமபுர ஆதீனம் பெரியவரா? தமிழுக்கும், சைவத்துக்கும் அவர் ஆற்றிய தொண்டு என்ன? 


பட்டனப் பிரவேசத் தடை என்பது, ஆன்மீக நடவடிக்கை அல்ல. அரசியல் சட்ட நடவடிக்கை. இறைவன் விரும்பும் மனித நேய, சமத்துவ நடவடிக்கை. அரசியல் சட்டப்படி, தனிமனிதனின் கண்ணியத்தைக் காப்பாற்ற வேண்டிய அரசியல் சட்டக் கடமை தமிழக அரசுக்கு உண்டு. தேவதாசி முறை, உடன்கட்டை ஏறுதல், பால்ய விவாகம், மனிதக் கழிவை மனிதனே அகற்றல், கை ரிக்ஷா ஒழித்தல் போன்ற அரசியல் சட்ட விரோத நடவடிக்கை போன்றதே மனிதனை, மனிதன் சுமக்கும் பல்லக்கு தூக்கும் நிகழ்வு. எனவே,  பட்டணப் பிரவேசத் தடை சரியான நடவடிக்கையே. கடந்த 2010-ஆம் ஆண்டில் ஸ்ரீரங்கம் அரங்கநாதன் கோயிலில் பிரம்மரதம் என்ற பல்லக்கு நிகழ்வை கோயிலின் இணை ஆணையர் ஜெயராமன் அவர்கள் தடைசெய்தது, சரியான நடவடிக்கை என வேத வியாச லட்சுமி நரசிம்ம பட்டர் வழக்கில் மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 


நீதிமன்றத் தீர்ப்பைப் பின்பற்ற வேண்டியது தமிழக அரசின் அரசியல் சட்டக் கடமை. எனவே, முற்றும் துறந்தவர் என்று தன்னை அழைத்துக் கொள்ளும் தருமபுர ஆதீனம்,  பட்டனப் பிரவேசம் என்ற அதிகாரத்துவ நடவடிக்கையை, மனித நேயமற்ற, கண்ணியக் குறைவான, அரசியல் சட்ட விரோதச் செயலை உடனே கைவிட வேண்டும்.  ஆன்மீகத்தில் பார்ப்பனீய அரசியலைக் கலந்து, அமைதிப் பூங்காவான தமிழகத்தைச் சிதைக்க வேண்டாம். இறைவன் விரும்பியபடி சமத்துவ ஆன்மீகத்தைத் தொடர்ந்து நிலைநிறுத்தும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம்  என்றும் துணை நிற்கும்” எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மயிலாடுதுறை மாவட்ட பா.ஜ.க. தலைவர் மும்பையில் கைது; தமிழக போலீசார் அதிரடி!

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
Mayiladuthurai District BJP Leader arrested in Mumbai by Tn police 

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரத்தில் ஆதீன சைவ மடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் 27வது தலைமை மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பட்டம் வகித்து வருகிறார். இந்த சூழலில் தருமபுரம் ஆதீன மடாதிபதியின் சகோதரர் விருத்தகிரி மயிலாடுதுறை காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில், ‘தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை சார்ந்த வினோத் என்பவரும், மடாதிபதியின் உதவியாளர் செந்தில் என்பவரும் தன்னை நேரில் சந்தித்து ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோ தங்களிடம் இருப்பதாக மிரட்டினர். மேலும், அவர்கள் அந்த வீடியோவை சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சியில் வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால் பணம் தர வேண்டும் என்று கூறி என்னைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயற்சி செய்தனர்.

இந்த சம்பவத்தில் செம்பனார்கோவிலைச் சேர்ந்த பிரபல கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, பா.ஜ.க. கட்சியின் மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் அகோரம், வழக்கறிஞர் செய்யூர் ஜெயச்சந்திரன் ஆகியோர் தூண்டுதலாக இருந்துள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த புகாரின் பேரில் மயிலாடுதுறை பா.ஜ.க. மாவட்டத் தலைவர் அகோரம், மடாதிபதியின் உதவியாளர் செந்தில், வினோத் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி கைது செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து பா.ஜ.க. பிரமுகர் அகோரம் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், ‘காவல்துறையினர் அரசியல் உள்நோக்கத்தோடு இந்த வழக்கில் தன்னை சேர்த்துள்ளது. நான் இதுவரையில் தலைமறைவாகவில்லை. முன் ஜாமீன் அளித்தால் நீதிமன்றம் அளிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு நிபந்தனைகளை பின்பற்ற தயாராக இருக்கிறேன்’ எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு கடந்த 6 ஆம் தேதி (06.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “கட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியும், வழக்கு விசாரணை நிலையில் இருப்பதையும் கருத்தில் கொண்டு அகோரத்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறேன்” எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தலைமறைவாக இருந்து வந்த அகோரம் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பையில் தலைமறைவாக இருந்த அகோரத்தை தமிழக தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

Next Story

'இவர்கள் எங்களை ஆதரிக்கிறார்கள் என்பதே போதுமானது'' - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு 

Published on 24/08/2023 | Edited on 24/08/2023

 

"It is enough that the Dharmapura Adheena Kurumaka Sannithans support us" - Principal M.K.Stal's speech

 

மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தருமபுரம் ஆதீன கலைக் கல்லூரியில் 75 வது பவளவிழாவின் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். விழாவில் பேசிய தமிழக முதல்வர், 'ஆலயங்களில் அன்னைத் தமிழ்; மூவாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் கோயில் நகைகள் மீட்பு; அறநிலையத்துறை சார்பில் 10 கலை கல்லூரிகள்; கோவில் திருப்பணிகளை ஒருங்கிணைக்க குழு; இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள பழமையான கோவில்களை பழமை மாறாமல் சீர் செய்து குடமுழுக்கு நடத்த உத்தரவு; திருக்கோவில் பணிகள் மேற்கொள்ள மண்டல மாநில அளவிலான வல்லுநர் குழு; தற்போது வரை 3,986 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்வதற்காக வல்லுநர் குழுவால் அனுமதி; ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான வரலாற்று சிறப்புமிக்க நூற்றுப் பன்னிரண்டு திருக்கோவில்களை பழமை மாறாமல் சீர் செய்ய 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு என இந்த நிதியாண்டில் மட்டும் 5,078 திருக்கோவில்களின் திருப்பணிகள் மூலம் இந்து சமய அறநிலையத்துறையைக் காத்து வரும் ஆட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி. இதனை மக்கள் அறிவார்கள். அறிவது மட்டுமல்ல வாழ்த்திக்கொண்டும் இருக்கிறார்கள்.

 

நீதிபதிகளே அறநிலையத்துறைக்கு நாம் ஆற்றும் பணிகளைப் பார்த்து வியந்து பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் மொழி, தமிழர்கள், தமிழ்நாடு என்ற மாநிலம் காப்பாற்றப்பட வேண்டும். வீர முத்துவேல் போன்ற அறிவியலாளர்களை எடுத்துக்காட்டாக கொள்ள வேண்டும். அனைவரும் தமிழ்த்தாயின் பிள்ளைகள் என்ற நோக்கத்தோடு செயல்படுவதற்கான உணர்வை தர வேண்டும். மாணவர்களின் பசியாற்றும் காலை உணவுத் திட்டம் தமிழ்நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது. அப்படி விரிவாக்கம் செய்யப்படக்கூடிய திட்டத்தை கலைஞர் படித்த திருக்குவளை பள்ளியில் இருந்து நான் தொடங்கி வைத்திருக்கிறேன். 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்ற வள்ளலாரின் ஏக்கத்தைப் போக்கும் வகையிலான மக்களுக்கான திட்டம் தான் காலை உணவுத் திட்டம். அனைத்து நன்மைகளும் அனைவருக்கும் கிடைக்கக் கூடாது என்ற ஒரு கூட்டம் தான் எங்களுக்கு எதிரான பரப்புரையில் ஈடுபடுகிறது. அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. தர்மபுர ஆதீனம் போன்ற நல்லிணக்கத்தை விரும்பும் சகோதரத்துவத்தை விரும்பும் குருமகா சன்னிதானங்கள் எங்களை ஆதரிக்கிறார்கள் என்பதே எங்களுக்குப் போதுமானது'' என்றார்.