ADVERTISEMENT

திருவோடோடு வந்த அன்பே சிவம் சாமியார்... லட்சங்களை சுருட்டிக்கொண்டு ஓட்டம்!  

11:23 AM Dec 11, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கோவை சிங்காநல்லூரை அடுத்த நீலிகோணம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மன்னார்சாமி என்பவரின் மகன் கௌதம் (39). இவர் சொந்தமாக மருந்து கம்பெனி நடத்திவருகிறார். கடந்த ஆண்டு கரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதையடுத்து கௌதம், ஆன்மீக பணிகளில் ஈடுபட்டார். இதற்காக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரி மலைக்கு அடிக்கடி சென்றுவந்தார். அப்படி அங்கே செல்லும்போது சாமியார் ராஜேந்திரன் என்கிற அன்பே சிவம் என்ற சாமியாருடன் தொடர்பு ஏற்பட்டது.

ஒவ்வொரு முறையும் சென்று வரும்போது அவரை சந்தித்து மூலிகைகள் மற்றும் மருந்துகள் குறித்து விளக்கம் கேட்பது கௌதமின் வழக்கம். சில நேரங்களில் சாமியார் ராஜேந்திரன், சில மூலிகை மருந்துகளை கௌதமுக்கு கொடுத்து அனுப்பியுள்ளார். அதை கௌதம் தனது நண்பர்கள் உறவினர்களுக்கு கொடுத்ததில் நோய்கள் குணமாகியுள்ளன. இதையடுத்து ஒருமுறை சதுரகிரி செல்லும்போது கௌதம், தனது செல்ஃபோன் எண் மற்றும் கோயம்புத்தூர் வந்தால் தனது வீட்டிற்கு வரும்படி சாமியார் ராஜேந்திரனுக்கு அழைப்பு விடுத்தார்.

அதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் சாமியார் ராஜேந்திரன் என்கிற அன்பே சிவம் கோவைக்கு வந்து கௌதமை சந்தித்தார். தொடர்ந்து கௌதம் மூலிகை மருந்துகள் மற்றும் எண்ணெய்களைத் தயாரித்து கோவையிலேயே விற்பனை செய்யலாம் என்று சாமியார் ராஜேந்திரனிடம் கூறியுள்ளார். இதையடுத்து சாமியார் ராஜேந்திரன், கௌதமின் வீட்டில் தங்கத் தொடங்கினார். கௌதம் அவருக்குத் தேவையான உணவு, தங்குமிடம் மற்றும் செலவுக்குப் பணம் என கொடுத்துவந்தார். இந்நிலையில், கௌதம் தனது வீட்டின் ஒரு பகுதியை வேறு ஒருவருக்கு பத்து லட்ச ரூபாய்க்கு லீசுக்கு கொடுத்தார்.

வங்கியில் இருந்த அந்தப் பணத்திலிருந்து 3 லட்ச ரூபாயை கௌதம் எடுத்துக்கொண்டு நேற்றுமுன்தினம் (09.12.2021) இரவு வீட்டிற்கு வந்தார். தொடர்ந்து சாமியார் ராஜேந்திரனிடம் பேசிவிட்டு பணத்தை வீட்டின் முன் அறையில் உள்ள டி.வி. ஸ்டாண்டில் வைத்துவிட்டு தூங்கச் சென்றார். மீண்டும் நேற்று காலை எழுந்து பார்த்தபோது சாமியார் அன்பே சிவம் ராஜேந்திரனை காணவில்லை. மேலும், சாமியார் ராஜேந்திரனின் உடைகள் மற்றும் திருவோடு உள்ளிட்டவை வீட்டில் இருந்தது.

சந்தேகமடைந்த கௌதம், வீட்டில் முன்னாள் இரவு பணம் வைத்திருந்த இடத்தைச் சென்று பார்த்தார். ஆனால், அங்கு வைக்கப்பட்டிருந்த பணம் மூன்று லட்சம் ரூபாயும் காணாமல் போயிருந்தது. அதையடுத்து கௌதம், சாமியார் ராஜேந்திரனை சிங்காநல்லூர் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளில் சென்று தேடினார். பின்னர் அவரது செல்ஃபோனுக்கு தொடர்புகொண்டார். ‘அன்பே சிவம்’ என்று சொல்லிவிட்டு, சாமியார் ராஜேந்திரன் தனது செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டார்.

அதையடுத்து கௌதம், சாமியார் ராஜேந்திரன் தனது மூன்று லட்ச ரூபாய் பணத்தை திருடிவிட்டதை உணர்ந்தார். தொடர்ந்து சிங்காநல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் கௌதம் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் சாமியார் ராஜேந்திரன் என்கிற அன்பே சிவம் என்ற நபரை தேடிவருகின்றனர். சாமியார் ராஜேந்திரன் 15 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தைப் பிரிந்து வசித்து வந்ததாகவும் அவரது குடும்பத்தார் சென்னையில் இருப்பதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து மேலும் போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT