/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_4317.jpg)
சென்னை - திருச்சி ரயில் பாதையில் திருவெண்ணெய்நல்லூர் அருகே கீரிமேடு என்ற பகுதியில் கடந்த 6.10.2021 அன்று தண்டவாளத்தில் முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். இந்த சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் ஜெயப்பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் விருத்தாசலம் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சித்தானங்கூரையைச் சேர்ந்த பாதிரியார் வின்சென்ட் லூயிஸ்(82) என்பது தெரியவந்தது. இவர் பேராசிரியராக பணி செய்து ஓய்வு பெற்ற பிறகு, அப்பகுதியில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராக பணி செய்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.
மேலும், வின்சென்ட் லூயிஸ் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரித்து வந்தனர். இந்த நிலையில் வின்சென்ட் லூயிஸ் பயன்படுத்தி வந்த செல்போன் காணாமல் போயிருந்தது. அதன் காரணமாக அவரின் செல்போன் சிக்னலை வைத்து விசாரணை நடத்தினர். ஆனால், செல்போன் டவர் கிடைக்காததால், பிறகு ஐ.எம்.இ.ஐ. நம்பரை வைத்து கண்காணித்து வந்தனர். அதன் மூலம் அந்த போன் பெங்களூருவைச் சேர்ந்த ரம்யா என்பவர் பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2_1664.jpg)
அதைத் தொடர்ந்து உடனடியாக பெங்களூர் சென்ற தனிப்படை போலீசார் ரம்யாவிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் சித்தானங்கூரைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் ஆக வேலை செய்து வரும் அமர்நாத்(28), அந்த செல்போனை தன்னிடம் கொடுத்ததாக ரம்யா தெரிவித்துள்ளார். அதன்படி போலீசார் அமர்நாத்தை பிடித்து அவரிடம் விசாரித்தனர்.
அப்போது அமர்நாத், சித்தானங்கூரைச் சேர்ந்த மாரிமுத்துவுடன் சேர்ந்து இருவரும் பாதிரியார் வின்சென்ட் லூயிசை கொலை செய்து, அவரது உடலை தண்டவாளத்தில் வீசி விட்டுச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் விருத்தாசலம் ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-3_606.jpg)
மேலும் அவர்களிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், பாதிரியார் வின்சென்ட் லூயிஸின் தம்பி தோட்டத்தில் இருவரும் வேலை செய்துள்ளனர். அப்போது வின்சென்ட் லூயிஸுக்கு நாக்பூரில் இருந்து பணம் வந்துள்ளது. அந்த பணத்தை திருட இவர்கள் இருவரும் திட்டம் தீட்டியுள்ளனர். அதற்காக வின்சென்ட் லூயிஸ் வீட்டுக்கு சென்றுள்ளனர். வின்சென்ட் லூயிஸ் வீட்டிலேயே இருந்துள்ளார். அதனால் பணத்தை திருடமுடியாமல் இருந்திருக்கிறது. பிறகு இருவரும் பாதிரியாரை மிரட்டி பணம் கேட்டுள்ளனர். அவர் பணம் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் வின்சென்ட் லூயிஸ் தலையில் அடித்து கொலை செய்துள்ளனர்.
கொலையை மறைப்பதற்காக வின்சென்ட் லூயிஸ் உடலை ரயில் தண்டவாளத்தில் போட்டு ரயிலில் இருந்து தவரி விழுந்து இறந்து போனதாக செட்டப் செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட இருவரையும் போலீஸார் விருத்தாசலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)