Skip to main content

தக்காளி விலை மேலும் உயர்வு 

Published on 12/07/2023 | Edited on 12/07/2023

 

The price of tomatoes has increased further

 

கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்பு விளைச்சல் அதிகரிப்பால் தக்காளி விலை கிலோ 10 ரூபாய் என்று இருந்த நிலையில் கடந்த இரு வார காலமாக சென்னை கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி 120 முதல் 150 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. இதையடுத்து தமிழக அரசு சார்பில் தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்த தக்காளியைக் கூடுதலாகக் கொள்முதல் செய்து 62 பண்ணை பசுமை கடைகள் மூலம் கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவு செய்து தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனையைத் தொடங்கிய தமிழக அரசு, முதல் கட்டமாக வட சென்னையில் 32 கடைகளிலும், மத்திய சென்னையில் 25  கடைகளிலும், தென் சென்னையில் 25 கடைகளிலும் என மொத்தம் 82 கடைகளில் கிலோ 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்து வருகிறது.

 

இந்த சூழலில் பீன்ஸ், பச்சை மிளகாய், இஞ்சி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும், பருப்பு வகைகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இதையடுத்து தக்காளி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விலையேற்றத்திற்கான காரணம், விலை உயர்வைத் தடுப்பது குறித்தும் முதல்வர் மு.க. ஸ்டாலின், கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரிய கருப்பன், கூட்டுறவுத் துறை செயலாளர் ஜெகநாதன், வேளாண்மைத்துறை செயலாளர் சமயமூர்த்தி உள்ளிட்ட அரசு அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின், 300 நியாய விலைக் கடைகளில் தக்காளி விற்பனையை விரிவுபடுத்த உத்தரவிட்டு இருந்தார்.

 

இதையடுத்து கூட்டுறவுத் துறை சார்பில் வெளியிட்டு இருந்த அறிவிப்பில், இன்று முதல் 300 ரேசன் கடைகளில் தக்காளி விற்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் ரேசன் கடைகளில் தக்காளி கிலோ ஒன்றுக்கு 60 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

 

இந்நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தையில் சில்லறை விற்பனையில் இன்று தக்காளி கிலோ ஒன்றுக்கு 10 ரூபாய் உயர்ந்துள்ளது. இதன் மூலம் முதல் ரக தக்காளி 130 ரூபாய்க்கும், இரண்டாம் ரக தக்காளி 110 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முன்னதாக நேற்று இன்று தக்காளி கிலோ ஒன்றுக்கு 100 முதல் 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ சின்ன வெங்காயம் 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்