
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் திருவுருவப்பட திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று (02/08/2021) மதியம் 12.45 மணிக்கு சென்னை வருகிறார். அவரை தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள் ஆகியோர் வரவேற்க உள்ளனர்.
அங்கிருந்து கிண்டி ராஜ்பவன் செல்லும் குடியரசுத் தலைவர், அங்கு சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். பின்னர், மாலை 04.30 மணியளவில் செயின்ட் ஜார்ஜ் கோட்டை செல்லும் குடியரசுத் தலைவர், சென்னை மாகாண சட்டசபை உருவாகியதன் 100ஆம் ஆண்டு விழாவில் மாலை 05.00 மணிக்கு கலந்துகொள்கிறார்.
விழாவில் தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு வரவேற்புரையாற்றுகிறார். விழாவுக்கு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தலைமை தாங்குகிறார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்.
விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் திருவுருவப் படத்தைத் திறந்துவைக்கிறார். படத்திறப்பு விழாவையொட்டி சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை விழாக்கோலம் பூண்டுள்ளது.
கரோனா பரவலுக்கு இடையே விழா நடைபெறுவதால், குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 234 சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சபாநாயகர்கள், சட்டமன்றத்தில் உள்ள கட்சிகளின் தலைவர்கள், தமிழ்நாடு மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், தலைமைச் செயலாளர், தமிழ்நாடு காவல்துறையின் சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி. உள்ளிட்ட சில உயர் அதிகாரிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற நீதிபதிகள், முன்னாள் சட்டமன்ற செயலாளர்கள், பத்திரிகையாளர்கள் 30 பேர் என 320 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் கரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
சட்டமன்றத்தில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அமரும் முதல் வரிசை, எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் எதிர்க்கட்சியினர் அமரும் முதல் வரிசையில் உள்ள நாற்காலிகள் எடுக்கப்பட்டு, அதற்குப் பதிலாக இரண்டு மீட்டர் இடைவெளியில் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டுள்ளன.
சட்டமன்றத்தில் கலைஞரின் படத்திற்கு கீழ் 'காலம் பொன் போன்றது; கடமை கண் போன்றது' என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.
நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் செயின்ட் ஜார்ஜ் கோட்டை வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது.
இதனிடையே, குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி சென்னை முழுவதும் ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையினருடன் இணைந்து கமாண்டோ வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.