Skip to main content

முத்தரசனை சந்தித்த தமிழ்நாடு கடை கட்டிட வாடகைத்தாரர்கள் சங்கத் தலைவர்!

Published on 02/10/2021 | Edited on 02/10/2021

 

President of the Tamil Nadu Shop Building Tenants Association who met Mutharasan

 


தமிழ்நாடு கடை கட்டிட வாடகைதாரர்கள் சங்கத் தலைவர் கோவில்பட்டி ராதாகிருஷ்ணன் தலைமையில் கோவில்பட்டிஜெயராஜ், திண்டுக்கல் வெள்ளிமலை ஆலோசகர், சேலம் ஷேக், தாம்பரம் பிரபாகர் ஆகியோர் இந்திய கம்யூனிஷ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசனை 28/09/2021 அன்று பாலன் இல்லத்தில் சந்தித்து தாங்கள் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றி விரிவாக எடுத்துரைத்து, மனுவினையும் அளித்தனர். 

 

அரசுக்கு தங்களுடைய பிரச்சனைகளைக் கொண்டு சென்று நல்லதொரு தீர்ப்பினை பெற்றுத் தருமாறு  வேண்டினர். முத்தரசனும் பிரச்சனைகளை ஏற்கனவே, அமைச்சரிடம் தெரிவித்திருப்பதைச் சுட்டிக்காட்டி, மறுபடியும் அமைச்சரைத் தொடர்பு கொண்டு வலியுறுத்துவதாக எடுத்துக் கூறினார். அமைச்சரை  உடனே செல் போனில் தொடர்பு கொண்ட போது, அமைச்சர் முதலமைச்சரோடு ஓர் நிகழ்ச்சியிலிருந்ததால் தொடர்பு கிடைக்கவில்லை. 

 

அமைச்சர் தொடர்பு கொள்ளும்போது நியாயமான வாடகையை முடிவு செய்ய அமைப்பதாகக் கூறிய உயர்கமிட்டி அமைப்பதைத் துரிதப்படுத்த வலியுறுத்துவதாகக் கூறினார். இந்த நிகழ்வின் போது தமிழ்நாடு கோயில் மனை குடியிருப்போர் சங்க மாநிலத் தலைவர் வி.அ.பாலசுப்பிரமணியனும், பொருளாளர்  எஸ்.ஏழுமலை உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

''அமலாக்கத்துறையை வைத்து தேர்தலுக்கு பணம் வசூலிக்கும் பாஜக''-முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி குற்றச்சாட்டு 

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

former MLA Balabharti accused of collecting money for elections using the enforcement department

 

திண்டுக்கல்லை சேர்ந்த மருத்துவரிடம் மதுரை அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் லஞ்சம் பெற்ற புகாரில் கைதுசெய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் திண்டுக்கல்லில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம், முன்னாள் மாவட்டச் செயலாளர் பாண்டி ஆகியோர் உடனிருந்தனர்.

 

செய்தியாளர்களிடம் பேசுகையில், ''வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேவையான பணத்தை வசூலிப்பதற்காக பாஜக அமலாக்கத்துறையை தற்பொழுது பயன்படுத்தி வருகிறது. அமலாக்கத்துறை மத்திய அரசின் அடியாள் துறையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மதுரையில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு அனுமதி அளிக்காமல் துணை ராணுவத்தை அலுவலகம் முன்பு கொண்டுவந்து நிறுத்தியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. காவல்துறையினர் சோதனை செய்ய அனுமதி அளிக்க முடியாது எனக் கூறுவதற்கு இவர்களுக்கு என்ன உரிமை உள்ளது. விசாரணை செய்ய காவல்துறையினர் வருகை தந்தால் அவர்களை அனுமதிப்பது தான் ஜனநாயக முறையாகும். ஆனால் அனுமதிக்க முடியாது என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

 

இது அராஜக போக்காகும். உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படக்கூடிய  அமலாக்கத்துறை, பிரதமர் அலுவலகத்தில் இருந்து வந்த உத்தரவின் பேரில் தான் நான் உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன் என அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி டாக்டர் சுரேஷ் பாபுவிடம் பேசியுள்ளார். உள்துறை அமைச்சகத்திற்கு சம்பந்தம் இல்லாமல் ஒரு அமலாக்கத்துறை அதிகாரி எப்படி இவ்வாறு பேச முடியும். ஆகவே உள்துறை அமைச்சகத்திற்கும் இந்த சம்பவத்திற்கும் சம்பந்தம் உள்ளது. ஆகவே தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை, தமிழக காவல்துறை இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

இது சாதாரண விஷயம் இதனை அரசியல் ஆக்காதீர்கள் லஞ்சம் வாங்குவது என்பது அனைத்து துறைகளிலும் உள்ளது என பொதுப்படையாகக் கூறி வருகிறார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. மத்திய அரசையும், அமலாக்கத்துறையும் காப்பாற்றும் விதமாக பேசி வருகிறார். மூன்று கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதை நியாயப்படுத்தும் வகையில் பேசி வருகிறார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தேர்தல் செலவுக்காக அமலாக்கத்துறையை பாஜக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை. மேலும் மாநில அரசு மருத்துவர் சுரேஷ் பாபுவிற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்துள்ளது'' என்று கூறினார். 

 

 

Next Story

சங்கரய்யா மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

Published on 15/11/2023 | Edited on 15/11/2023

 

Communist Party of India condoles the demise of Sankaraiah

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவரும், விடுதலைப் போராட்ட வீரருமான என். சங்கரய்யா(102)  உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் சங்கரய்யாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், “கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்தத் தலைவரும் விடுதலைப் போராட்ட வீரருமான தோழர் என். சங்கரய்யா(102) இன்று காலமானார் என்ற துயரச் செய்தி ஆழ்ந்த வேதனையளிக்கிறது. சிறு வியாபாரக் குடும்பத்தில் 1921 ஆம் ஆண்டு பிறந்த தோழர் என். சங்கரய்யா பள்ளி மாணவப் பருவத்தில் நாட்டின் விடுதலைப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டார். கல்லூரியில் பயின்ற காலத்தில் மாணவர்களைத் திரட்டி போராடுவதில் பொதுவாழ்வைத் தொடங்கினார். மதுரை மாணவர் சங்கம் உருவாக்கியதில் பெரும் பங்களிப்பு செய்தவர். இந்த அமைப்பு அனைத்திந்திய மாணவர் பெருமன்றமாக உருவாக்கப்பட்டபோது அதன் முதல் மாநிலச் செயலாளராகப் பணியாற்றியவர்.

 

ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் மதுரை மாவட்டத்திலும், சுற்று வட்டாரத்திலும் கட்சி அமைப்புகளையும், விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் அமைப்பு ரீதியாகத் திரட்டி போராடியவர். நாட்டின் விடுதலைப் போராட்டம் மற்றும் மக்கள் நலப் போராட்டங்களில் பங்கேற்று பலமுறை சிறைச் சென்றவர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலச் செயலாளராகப் பணியாற்றிய தோழர் என். சங்கரய்யா, தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக மூன்று முறை தேர்வு பெற்று, சிறப்பாகச் செயல்பட்டவர். அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளராக நீண்டகாலம் செயல்பட்டவர்.

 

பொது வாழ்வுப் பணியில் முன்னோடியாகத் திகழ்ந்து வந்த தோழர் என். சங்கரய்யாவுக்கு தமிழ்நாடு அரசு ‘தகைசால் தமிழர்’ விருது கொடுத்து பெருமைப்படுத்தியது.  சிறு வயது தொடங்கி இறுதி மூச்சு சுவாசித்த காலம் வரை நெறி சார்ந்து வாழ்ந்து பொது வாழ்விற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்த தோழர் என். சங்கரய்யாவின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு செவ்வணக்கம் கூறி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்தத் தலைவருக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு முழுவதும் மூன்று நாட்கள் செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்தும் வகையில் கட்சிக் கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்கவிடுமாறு கேட்டுக் கொள்கிறது. அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், மார்க்சிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது. வருத்தத்துடன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.