
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று தமிழகம் வரவிருக்கிறார். இதையொட்டி தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளது. இன்று காலை 11.30 மணிக்கு டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு கர்நாடக மாநிலம் மைசூர் சிங்காரா விமானப்படை தளத்திற்கு வரும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அங்கிருந்து மாலை 3.30 மணிக்குப் புறப்பட்டு மாலை 3.45 மணிக்கு மசினகுடி செல்கிறார். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் ஆஸ்கர் நாயகர்கள் பொம்மன், பெள்ளியை சந்திக்கும் அவர், பிறகு மீண்டும் மசினகுடிக்கு சென்று அங்கிருந்து மாலை 5 மணிக்கு மைசூர் செல்கிறார்.
இதனைத் தொடர்ந்து மைசூரிலிருந்து புறப்பட்டு இரவு 7.50 மணிக்கு சென்னை வரும் குடியரசு தலைவர் நாளை (6.8.2022) சென்னை பல்கலைக்கழகத்தின் 165 ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று, உரை நிகழ்த்தவுள்ளார். பின்னர் இரவு ஆளுநர் மாளிகையில் தங்கும் குடியரசுத் தலைவர் மறுநாள் திங்கட்கிழமை (7.8.2023) அன்று காலை புதுச்சேரிக்கும் செல்லவுள்ளார். குடியரசுத் தலைவர் சென்னை வருகையையொட்டி 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.