ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பல்!

presidency college student Incident in chennai

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (20). இவர் சென்னையில் உள்ள மாநில கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும், இதே கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சத்தியமூர்த்தி நேற்று (05-10-23) கல்லூரி முடிந்து தனது வீட்டிற்கு செல்வதற்காக சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு வந்திருந்தார். அதன் பிறகு தனக்கான ரயில் வந்ததும் அந்த ரயிலில் ஏறி அமர்ந்திருந்தார். அப்போது, 6 பேர் கும்பல் சிலர் அரிவாளுடன் ரயிலில் ஏறினர். மேலும் அவர்கள், சத்தியமூர்த்தியை இருக்கைக்கு சென்று அவரை சுற்றி வளைத்து வெட்ட முயன்றனர். இதில் அதிர்ச்சியடைந்த சத்தியமூர்த்தி அவர்களிடம் இருந்து தப்பி ஓடினார். அவரை துரத்திச் சென்ற அந்த கும்பல் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டினர். இதில் சத்தியமூர்த்தி படுகாயமடைந்தார். மேலும், அந்த ரயில் நிலையத்தில் இருந்த பயணிகள் அலறி அடித்து ஓடியதால் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிச் சென்றனர்.

இதனையடுத்து, அங்கிருந்த பயணிகள் இந்த சம்பவம் குறித்து ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த ரயில்வே காவல்துறையினர், படுகாயமடைந்த சத்தியமூர்த்தியை மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து எழும்பூர் ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அவர்கள் நடத்திய அந்த விசாரணையில், சென்னை மாநில கல்லூரியில் படிக்கும் திருவள்ளூர் மாணவர்களுக்கும், கும்மிடிப்பூண்டி மாணவர்களுக்கும் நீண்ட காலமாக மோதல் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக தான் திருவள்ளூரை சேர்ந்த சத்தியமூர்த்தியை கும்மிடிப்பூண்டி மாணவர்கள் அரிவாளால்வெட்டியுள்ளனர் என்று காவல்துறையினருக்கு தெரியவந்தது. மேலும், சத்தியமூர்த்தியை வெட்டிய 6 பேர் கொண்ட கும்பலை ரயில்வே காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். அனைவரும் கூடியிருக்கும் ரயில் நிலையத்தில் மாணவர் ஒருவர் வெட்டப்பட்ட சம்பவம் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chennai thiruvallur
இதையும் படியுங்கள்
Subscribe