
இரண்டு தினங்களுக்கு முன்பு திருப்பூரில் இருந்து ஆந்திரா நோக்கிச் சென்ற இன்டர்சிட்டி ரயிலில் மகளிர் பெட்டியில் பயணித்த கர்ப்பிணி பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. வேலூர் கே.வி.குப்பம் அருகே நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் ஹேம்ராஜ் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான்கு மாத கர்ப்பிணி பெண்ணின் கரு கலைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவத்தை அடுத்து தமிழகத்தில் ரயில்களில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பிலும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரயில்வே போலீசார் சார்பில் மகளிர் பெட்டியில் பெண்களுக்கான பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
அதில், 'தவறுதலாக உங்கள் பொருட்களை ரயிலில் வைத்து விட்டு இறங்கி விட்டால் உடனே ரயில்வே ஹெல்ப் நம்பருக்கு போன் செய்து 'என்னுடைய உடமைகளை தெரியாமல் வைத்து விட்டேன்' என சொன்னால் அடுத்த ஸ்டேஷனில் உங்களுக்கு உதவி செய்வார்கள். ஓடும் ரயிலில் ஏறாதீர்கள். குழந்தைகளோடு பயணிக்கும் பொழுது குழந்தைகளை கையில் பிடித்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு பாதுகாப்பு இல்லை என தோன்றினால் உடனே 1512 139 என்ற ரயில்வே பாதுகாப்பு எண்ணுக்கு அழையுங்கள். 24 மணி நேரமும் சேவை இருக்கும்' என்றனர்.