Pregnant woman in intensive care with sample given by druggist

சட்ட விரோதமாக கருக்கலைப்பு மாத்திரை கொடுத்ததாகசிறை சென்று ஜாமீனில் வந்தவரால் மீண்டும் ஒரு கர்ப்பிணி பெண் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருப்பது திட்டக்குடி அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

அண்மையில், கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகில் உள்ள அசகளத்தூர் மருந்துக் கடைக்காரர் வடிவேல் கருக்கலைப்பு மாத்திரை கொடுத்ததில் ரத்தப்போக்கு அதிகரித்து அமுதா என்ற பெண் இறந்து போனார். காவல்துறைவழக்குப் பதிவு செய்து மருந்து கடைக்காரர் வடிவேல் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், திட்டக்குடி அருகே உள்ள ஆவட்டி கூட்டு ரோட்டில் கிளினிக் வைத்திருக்கும் சுரேஷ் என்பவரிடம் ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் என்பவரது மனைவி 32 வயது கஸ்தூரி. இவருக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், மூன்றாவதாக ஒன்பது வார கர்ப்பிணியாக இருந்துள்ளார். இவர் தன் வயிற்றில் வளரும் கருவைக் கலைப்பதற்காக சுரேஷிடம் சென்றுள்ளார். கடந்த 15 ஆம் தேதி கஸ்தூரிக்கு சுரேஷ் கருக்கலைப்பு மாத்திரைகளைக் கொடுத்துள்ளார்.

Advertisment

இந்த நிலையில், நேற்று முன்தினம் கஸ்தூரிக்கு உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு திட்டக்குடிஅரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு கஸ்தூரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கஸ்தூரி கொடுத்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஆவட்டியில் கிளினிக் வைத்து நடத்தி வந்த சுரேஷை கைது செய்தனர். மேலும், கைது செய்யப்பட்ட சுரேஷ் மருத்துவம் சம்பந்தமாக எதுவும் படிக்காமலேயே ஆவட்டியில் போலி மருத்துவமனை நடத்தி வந்ததும்,மேலும் இவர் ஏற்கனவே கருக்கலைப்பு மாத்திரை கொடுத்த விவகாரத்தால் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்து தற்போது ராமநத்தம் காவல் நிலையத்தில் தினசரி கண்டிஷன் பெயிலில் கையெழுத்துப் போட்டு வருகிறார் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

சிறைக்குச் சென்று வெளியே வந்ததும், மீண்டும் கருக்கலைப்பு மாத்திரை கொடுத்து பெண்ணுக்கு ஆபத்தான நிலையை உருவாக்கியுள்ளார் சுரேஷ். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது போன்ற போலி மருத்துவர்கள், மருந்துக் கடைக்காரர்கள், கருக்கலைப்பு மாத்திரை கொடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.