pregnant wife husband passed away in accident

திருவண்ணாமலை மாவட்டம், ஆத்தூரைச் சேர்ந்தவர் சக்தி(35). இவரது மனைவி சுகன்யா(27). இவர்களுக்குதிருமணமாகி ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், தற்போது சுகன்யா 4 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். கணவன் மனைவி இருவரும் நேற்று முன்தினம் விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருகே உள்ள எதப்பட்டு கிராமத்திற்கு மருந்து வாங்குவதற்காக தங்களுடைய இருசக்கர வாகனத்தில் சென்றனர்.

Advertisment

அங்கு மருந்து வாங்கிக் கொண்டு வீட்டுக்குத்திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது தேவிகாபுரம் என்ற இடத்தில் சாலையின் வளைவுப் பகுதியில் திரும்பும் போது எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த கல் மீது அவர்களது இருசக்கர வாகனம் மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் அருகிலிருந்த எட்டடி பள்ளத்தில் கவிழ்ந்து வீழ்ந்துள்ளது. அதில், அங்கிருந்த பாறையில் கணவன், மனைவி இருவரின் தலையும் மோதி, ரத்த வெள்ளத்தில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Advertisment

விபத்தை நேரில் பார்த்த அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள், அவலூர்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த கணவன் மனைவி இருவரது உடலையும் மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.