Pregnant lady passed away in erode district police investigation

ஈரோடு மாவட்டம், வெள்ளோட்டாம்பரப்பு பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் சத்யா. பட்டதாரியான இவருக்கும், சிவகிரி அருகே உள்ள சுள்ளிபரப்பைச் சேர்ந்த குணசேகரன் என்பவரின் மகன் சஞ்சய் அருள் என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்துக்கு முன் திருமணம் நடைபெற்றது. சஞ்சய் அருள் வெளி நாட்டுக்கு வேலைக்கு செல்ல முயற்சித்து வந்துள்ளார்.

Advertisment

இந்த நிலையில் கர்ப்பமடைந்த சத்யாவுக்கு கடந்த 3 மாதத்துக்கு முன்பு வளைகாப்பு நடத்தி அவரது பெற்றோர் தங்களது வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். சஞ்சய் அருள் அவ்வப்போது தனது மாமனார் வீட்டுக்கு சென்று மனைவியைப் பார்த்து வந்துள்ளார். சத்யாவை மருத்துவமனைகு அழைத்துச் செல்லவேண்டும் என்றும் அதற்காக கார் எடுத்துக் கொண்டு வருமாறும் சத்யாவின் தந்தை மருமகன் சஞ்சய் அருளுக்கு திங்கள்கிழமை போன் செய்துள்ளார். அப்போது தனக்கு உடல் நிலை சரியில்லை என்றும் நாளை மருத்துவமனைக்கு செல்லலாம் எனவும் மருமகன் சஞ்சய் அருள் கூறியுள்ளார்.

Advertisment

இதனால் கோபமடைந்த அவரது மனைவி சத்யா வீட்டின் படுக்கையறைக்குள் சென்று கதவை உள்பக்கமாகத் தாழிட்டுக் கொண்டுள்ளார். சத்யாவுக்கு கோபம் ஏற்படும்போதெல்லாம் இதுபோல் அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டு பின்னர் ஒரு மணி நேரம் கழித்து அவராகவே வெளியில் வந்துவிடுவது வழக்கமாம். அதனால் இப்போதும் சத்யா அவ்வாறு ஒரு மணி நேரம் கழித்து வெளியில் வந்துவிடுவார் என நினைத்து அவரது பெற்றோர்கள் தங்களது வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்துள்ளனர். ஆனால் வெகு நேரமாகியும் சத்யா வெளியே வராததால் அவரது தாயார் ஜன்னல் வழியாக பார்த்துள்ளார். அப்போது மின் விசிறி மாட்டும் கொக்கியில் சேலையால் தூக்கிட்ட நிலையில் சத்யா தொங்கியுள்ளார்.

உடனடியாக அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்து சத்யாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக ஈரோட்டில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சத்யாவை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே சத்யா இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளார். மேலும் சதியா வயிற்றில் இருக்கும் குழந்தையை பரிசோதித்த போது குழந்தையும் இறந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் திருமணமாகி 1 வருடமே ஆவதால் இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெறுகிறது. பிரசவத்துக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் சத்யா மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.