/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/k.balakrishnan cpim 150.jpg)
திருச்சியில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியினரை காவல்துறை ஆய்வாளர் எட்டி உதைத்ததில் கர்ப்பிணி பெண் மரணம் அடைந்தார். இதற்கு நியாயம் கேட்டு மறியல் செய்த பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். போலீசார் தடியடி நடித்தியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளதாவது,
திருச்சியில் இன்று இரவு சுமார் 07.30 மணியளவில் தஞ்சாவூர் - திருச்சி நெடுஞ்சாலையில், துவாக்குடிக்கு அருகில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியினரை பின்தொடர்ந்து சென்று காவல்துறை ஆய்வாளர் எட்டி உதைத்ததில் உஷா என்ற கர்ப்பிணி பெண் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்துள்ளார், அவரது கணவர் படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் பதற்றமடைந்து சம்பந்தப்பட்ட காவல்துறை ஆய்வாளரை கைது செய்து, கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டுமென மறியல் போராட்டம் நடத்தியுள்ளனர். அமைதியான முறையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாக தடியடி தாக்குதல் நடத்தி விரட்டியடித்துள்ளனர். இந்த தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டவர்களை கைது செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிகின்றன. காவல்துறையினரின் இந்த வன்முறை வெறியாட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
கர்ப்பிணி பெண் உஷா மரணத்திற்கு காரணமான காவல்துறை ஆய்வாளர் மீது கொலை வழக்கு பதிவு செய்து, உடனடியாக அவரை கைது செய்ய வேண்டுமெனவும், அமைதியாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது தடியடி தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், கைது செய்யப்பட்ட பொதுமக்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.
இவ்வாறு கூறியுள்ளார்.
Follow Us