preacher was stabbed during a midnight pooja near Senchi

Advertisment

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள பெருங்காப்பூர் கிராமத்தின் காட்டு பகுதியில் பிரசித்தி பெற்ற காளி கோயில் ஒன்று உள்ளது. இந்த காளி கோயிலில் நள்ளிரவு நேரத்தில் அவ்வப்போது பூஜை வழிபாடு நடக்கும். அதில் கலந்து கொள்ள ஏராளமான பக்தர்கள் வெளியூர்களில் இருந்து வருவது வழக்கம். இந்தக் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இரவு நேரங்களில் அருள்வாக்கு கேட்பார்கள்.இந்தக் கோயிலில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் கண்ணன் மற்றும் கணபதி என இருவரின் தோப்புகள் உள்ளன.

இந்நிலையில் கணபதி, தனது தோப்பை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் அதிகாலை வேளையில் சென்றுள்ளார். அப்போது அவரது தோப்பின் பக்கத்து தோப்பான கண்ணன் என்பவரின் தோப்பில் இருந்து முனகல் சத்தம் கேட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து கணபதி, அந்த இடத்திற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது சாமியார் கோலத்தில் இருந்த ஒரு மனிதர் குடல் சரிந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கணபதி, உடனடியாக சத்தியமங்கலம் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார். அந்தத் தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்த சாமியாரை மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அந்த நபர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

Advertisment

இந்நிலையில், சிகிச்சைபெற்று வரும் அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அவர் பெர்யர் சரவணன்(42) என்பது தெரியவந்தது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டம், ஆரடப்பட்டு கிராமப் பகுதியில் கெளரி வாக்கு மையம் நடத்தி வந்துள்ளார். இவர், அவ்வப்போது பெருங்கப்பூர் காளி கோயிலுக்கு வருகை தந்து நள்ளிரவு பூஜையின் போது பக்தர்களுக்கு அருள் வாக்கு சொல்வது வழக்கம். அதன்படி அன்று இரவு கோவிலுக்கு வந்த சாமியார் சரவணன், இரவு 10 மணி வரை பக்தர்களுக்கு அருள் வாக்கு கூறிவிட்டு பிறகு கண்ணன் என்பவர் தோப்பு பகுதியில் நள்ளிரவு பூஜை நடத்துவதற்கு யாரோ அழைத்ததன் பேரில் அங்குச் சென்றுள்ளார். அப்போது, பின்புறமாக வந்த மர்ம நபர் தன்னை கத்தியால் குத்தி விட்டு தப்பியோடிவிட்டதாகவும், அந்த நபர் குறித்து எந்த அடையாளமும் தெரியவில்லை என்றும் சாமியார் கூறியுள்ளார்.

மேலும் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் சாமியாருடன் அவரது நண்பரும் வந்துள்ளார். ஆனால் அவரைக் காணவில்லை. ஒரு வேலை அவர்தான் சாமியாரை குத்திவிட்டு தப்பிவிட்டாரா என்ற சந்தேகமும் போலீசாருக்கு எழுந்துள்ளது. அதேபோல், பல்வேறு கோணங்களிலும் போலீஸார் இது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.